கேரள மருத்துவக்கழிவுகளை நெல்லையில் கொட்டும் விவகாரம் : மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு

மதுரை : கேரள மருத்துவக்கழிவுகளை நெல்லையில் கொட்ட தடை விதிக்க கோரிய வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் லாரிகள் மூலம் நெல்லை மாவட்ட கிராமங்களில் கொட்டப்படுவதால் தொற்று நோய் ஏற்படுவதாக புகார் எழுந்தது. கேரளாவில் இருந்து லாரிகளில் மருத்துக் கழிவுகளை கொண்டு வந்து இரவு நேரங்களில் நெல்லை பகுதியில் கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் தொடர்ந்து இதே நிலை நீடித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் நெல்லையில் உள்ள புளியரை பகுதியில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த 12 லாரிகள் சோதனை சாவடியில் பிடிபட்டது.

இதையடுத்து மருத்துவ கழிவுகளின் தன்மையை சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அபாரதம் விதித்தனர். இந்நிலையில் கேரள மருத்துவக்கழிவுகளை நெல்லையில் கொட்ட தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் நோய் தடுப்பு உபகரணங்கள், மருத்துவ ஆய்வு பொருட்கள், உயிரியல் உற்பத்தி, பரிசோதனை பொருட்கள், உடற்கூறியல் திசுக்கள், விலங்கு ஆராய்ச்சி கழிவுகள், ஊசிகள், மருத்துவ கண்ணாடி பொருட்கள் ஆகியவை மருத்துவ விதிகளை பயன்படுத்தி அழிக்கப்படாமல் திறந்த வெளியில் கொட்டப்படுகிறது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: