‘ரத்த மையம்’ என பெயர் மாறும் ‘ரத்த வங்கி’ ரத்ததானம் செய்வோரின் வயது வரம்பு 65 ஆக உயருகிறது: புதிய விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வருகிறது

நாகர்கோவில்: ரத்ததானம் செய்வோரின் வயது வரம்பை 65 ஆக உயர்த்திட மத்திய அரசு முடிவு செய்து இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டுள்ளது.ரத்ததானம் செய்வோரின் அதிகபட்ச வயது வரம்பு 65 ஆக உயர்த்திட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 18 வயது முதல் 60 வயது வரையுள்ளவர்கள் மட்டுமே ரத்ததானம் செய்ய  இயலும். இந்தநிலையில் ரத்ததானம் தொடர்பான ‘டிரக்ஸ் அன்ட் காஸ்மெடிக்ஸ்’ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக, இது தொடர்பான வரைவு சட்ட திருத்தத்தை மத்திய சுகாதார  அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ரத்ததானம் செய்கின்றவர்களின் வயது வரம்பு 65 ஆக அதிகரிக்கப்படும். ஆனால் முதல் முறையாக ரத்ததானம் செய்கின்றவர்கள் 60 வயதுக்கு  மேற்பட்டவர் எனில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரத்த வங்கி என்பது ரத்த மையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும். இதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏதும் இல்லை. ரத்ததானம்  செய்கின்றவர்களின் தகுதியை நிர்ணயம் செய்ய 104 நிபந்தனைகள் புதிய சட்ட திருத்தத்தில் கொண்டுவரப்பட இருக்கிறது.

 *‘டாட்டூ’ எனப்படும் பச்சை குத்துதல் செய்த நபர்கள் ஒரு வருடத்திற்கு பிறகே ரத்த தானம் செய்ய இயலும். தற்போது இது ஆறு மாதமாக உள்ளது. டெங்கு காய்ச்சல், சிக்குன் குன்யா ஆகியவை  பாதித்தவர்கள் நோய் முற்றிலும் குணமாகி 6 மாதம் கடந்த பின்னரும், ‘ஜிகா’ வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நோய் குணமாகி 4 மாதத்திற்கு பின்னரும் ரத்ததானம் செய்யலாம்.  மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் தீர்ந்து மூன்று மாதத்திற்கு பிறகு ரத்ததானம் செய்யலாம்.

ற்போது இது மூன்று ஆண்டுகளாக உள்ளது. காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் நோய் குணமாகி இரண்டு வருடங்களுக்கு பின்னரே இனி ரத்ததானம் செய்ய இயலும்.

* மூன்றாம் பாலினத்தவர், ஓரினச்சேர்க்கையாளர், பாலியல் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு ரத்ததானம் செய்ய அனுமதியில்லை. அதிகப்படியாக ரத்தம் வாயிலாக நோய்  பரவுகின்ற பகுதிகள் என்று கண்டறியப்பட்ட  இடங்களில் பயணித்தவர்களுக்கும், வசித்தவர்களுக்கும், போதிய தூக்கம் இல்லாமல் இரவு பணியில் (நைட் ஷிப்ட்) வேலை  செய்கின்றவர்களுக்கும் ரத்த தானம் செய்ய இயலாது.

* ரத்ததான முகாம்களில் தொடர்புடைய கவுன்சிலர்கள், மருத்துவ சமூக பணியாளர்களின் சேவை உறுதி செய்யப்படும். சமூக பணிகள், சமூகவியல், உளவியல் போன்றவற்றில் பட்ட  மேற்படிப்பு, மருத்துவ அறிவியலில் பட்டம், ரத்த மையங்களில் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்ற அனுபவம் உள்ளவர்களுக்கு கவுன்சிலர்களாக பணியாற்றலாம்.

*2016ம் ஆண்டு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் அளித்த பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் இந்த வரைவு சட்ட திருத்தத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக கருத்துகளை  தெரிவிக்க விரும்புகின்றவர்கள் வரும் ஜனவரி 12ம் தேதிக்கு முன்னதாக drugsdiv-mohfw@gov.in என்ற இ-மெயில் முகவரியில் தெரிவிக்கலாம் என்றும் மத்திய சுகாதார  அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்துகளை கேட்ட பின்னர் இது தொடர்பாக இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: