மகா புஷ்கர விழாவுக்கு பிறகு கண்டுகொள்ளப்படாத தாமிரபரணி

வி.கே.புரம்: மகா புஷ்கர விழாவிற்கு பின் தாமிரபரணி நதி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் உள்ளதால் நதிக்கரைகள் மீண்டும் பொலிவிழந்து வருகின்றன. பழைய துணிகள்,  குப்பைகள் கொட்டப்படுவதும், கழிவுகள் கலக்கப்படுவதும் மீண்டும் தொடர்கதையானது.நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் பொதிகை மலையிலுள்ள பூங்குளத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையே  120 கி.மீ தூரம் பாய்ந்து புன்னக்காயலில் வங்கக்கடலில் கலக்கிறது. வனப்பகுதியில் மிகுந்த நீர்ப்பிடிப்பு பரப்பு  இருப்பதால் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய இரண்டு பருவ  மழைக்காலங்களிலும் நீர்வரத்து பெற்று தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே உற்பத்தியாகி தமிழ்நாட்டிலேயே கடலில் சேரும் நதியான    தாமிரபரணியின் மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல லட்சம் ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி  பெறுகின்றன. மேலும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த தாமிரபரணி நதியில் 144 ஆண்டுகளுக்கு  பின் கடந்த அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் 23ம் தேதி வரை மகாபுஷ்கர விழா நடந்தது. இதனால் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை 148 படித்துறைகளில் விழா தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பே தூய்மை பணியை பல்வேறு தொண்டு நிறுவனங்களும் சமூக  ஆர்வலர்களும் மேற்கொண்டனர். அரசு சார்பில் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யப்படாத போதும் பல்வேறு அமைப்புகள் புஷ்கர விழாவை சிறப்பாக நடத்த தாமிரபரணி நதியை சுத்தம்  செய்வது உட்பட பல்வேறு பணிகளை செய்தனர்.

 தாமிரபரணி நதியில் மகாபுஷ்கர விழாவின் பொழுது 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர். இதில் தமிழக அமைச்சர்கள், நடிகர்கள், நீதிபதிகள், முக்கிய அரசியல்  பிரமுகர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் அடங்குவர்.  மகா புஷ்கர விழா முடிந்ததும் தற்போது தாமிரபரணியை யாரும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு காரணங்களால்     தாமிரபரணி உற்பத்தியாகும்  பாபநாசத்திலேயே மாசுபட ஆரம்பிக்கிறது. ஆற்றின் கரையோரத்தில் கொட்டப்படும் கழிவுகளாலும் கரையோரத்தில் உள்ள மண்டபங்களிலிருந்து ஆற்றில் கலக்கும்  கழிவுகளாலும் நதி தொடர்ந்து மாசுபட்டுக் கொண்டிருக்கிறது. புஷ்கர விழா சமயம் நதிக்கரையில் இரவு நேரத்தில் மின்சார வசதி செய்யப்பட்டிருந்தது. தற்போது இரவு நேரம் நதிக்கரை  இருட்டாக உள்ளது. இதுகுறித்து விகேபுரம் டாணா அனவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பால்ராஜ் கூறும்போது, ‘தாமிரபரணி மகாபுஷ்கர திருவிழாவால் பாபநாசம் கோயிலின் வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால் அறநிலையத்துறை சார்பாக தாமிரபரணி நதியை தூய்மை படுத்துவோ,  பக்தர்களின் அடிப்படை வசதியை மேம்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாபநாசம் கோயில் முன் இருந்த பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துமிடம் புஷ்கர விழாவின் போது  அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் இன்று வரை முடி காணிக்கை செலுத்துமிடம் செயல்படவில்லை. பரிகாரம் செய்து துணிகளை பக்தர்கள் தாமிரபரணி நதியில் போடதவாறு மாற்று ஏற்பாடு  செய்து கண்காணிக்க வேண்டும். படித்துறையில் மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும். படித்துறையில் வயதானவர்கள் பிடித்து ஏறுவதற்கு வசதியாக இருந்த கம்பிகள் மரக்கிளை விழுந்து  சேதமடைந்துள்ளன. இதனை சரி செய்ய வேண்டும். கோயில் முன் உள்ள உயர் கோபுர மின் விளக்கு இரவு 9 மணிக்கு மேல் எரிவதில்லை. அது சரி செய்யப்பட வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: