வில்லங்க சான்றில் விடுபடுவதை தவிர்க்க நவீன முறையில் ஆவணங்கள் ஸ்கேன் செய்வதால் ஊழல் தவிர்ப்பு

* பழையதை செய்ய முடியாது * பதிவுத்துறை அதிரடி உத்தரவு

சென்னை: வில்லங்க சான்றில் விடுபடுவதை தவிர்க்க வரிசைப்படி பழைய ஆவணங்களை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: பதிவுற்ற ஆவணங்கள் உடனுக்குடன் ஒளிவருடல் செய்யப்பட வேண்டும் எனவும், ஒரு நாள் முழுவதும் வைத்து மாலையில் அல்லது மறுநாள் ஒளிவருடல் செய்ய கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய ஆவண விவரங்களை உட்புகுத்துதல் மற்றும் ஒளிவருடல் பணி முறையாக வரிசைக்கிரமமாக செய்யப்பட வேண்டும்.எனினும் சில சார்பதிவாளர் அலுவலகங்களில் மேற்கண்ட நடைமுறையை பின்பற்றாமல் வரிசைக்கிரமமாக அன்றி, தயார் செய்யப்பட்ட அட்டவணையை சான்றளிப்பது தெரிய வந்துள்ளது. மேலும், சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணத்தை திரும்பபெற தகுதி பெற்ற நபர் வந்து கோரும் போது மட்டுமே ஒளிவருடல் செய்வது தெரிய வந்துள்ளது.

அட்டவணை சான்றளிக்கப்பட்ட பின்பே இவ்விவரமானது வில்லங்க சான்றில் இடம் பெறும். அட்டவணை உரிய நேரத்தில் சான்றளிக்கப்படாததால் இணையதளம் மூலம் வில்லங்க சான்று விவரங்களை பார்வையிடுவோருக்கு பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் விவரங்கள் விடுபட வாய்ப்பு ஏற்படுகிறது. இச்செய்கை இந்த வில்லங்க சான்றை பார்த்து சொத்து வாங்குவோருக்கும், கடன் வழங்குவோருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். மேற்கண்ட நடைமுறையை தவிர்க்கும் விதமாக ஸ்டார் 2.0 மென்பொருள் வரிசையாக அட்டவணை சான்றளித்தல் மற்றும் ஒளிவருடல் செய்யும் வண்ணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னர் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சான்றளிக்காமலும், ஒளிவருடல் செய்யாமலும் பின்னர் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கான அட்டவணையை சான்றளிக்க முற்படும் போது ஒளிவருடல் செய்ய முற்படும் போதும், மென்பொருளானது அனுமதி அளிக்காது. இந்த நடைமுறை பொதுமக்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உரியவாறு கடைபிடித்து வரிசைக்கிரமமாக அட்டவணையை சான்றளிக்கவும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஒளிவருடல் செய்யவும் பதிவு அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: