எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மின் ஊழியர்களின் குடும்பங்கள்

திருவொற்றியூர்: எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பில் அடிப்படை வசதி இல்லாததால், மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்கள் அவதிப்பட்டு வருகிறது.    எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பை அனல் மின் நிலைய அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. இதனால் குடியிருப்புக்குள் பல இடங்களில் குழாய் பழுதாகி கழிவுநீர் கசிந்து வருகிறது. ஜன்னல்கள் உடைந்துள்ளது. சுவற்றில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பைச் சுற்றி செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் கொசு தொல்லை அதிகரித்து அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும், பாம்பு மற்றும் விஷப் பூச்சிகள் சுற்றித்திரிவதால் இரவு நேரங்களில் வெளியே வரவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அந்த குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என்று இங்கு வசிக்கும் அனல் மின்நிலைய ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் குடும்பத்தினர் மின்வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: இந்த அனல் மின் நிலைய குடியிருப்பில் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்கு ரூ.5,000 முதல் 8,000 வரை வாடகையாக எங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் இங்கு வசிப்பவர்களுக்கு அனல் மின் நிலையம் எந்த அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை. இதனால் நாங்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறோம். கழிவுநீர் தேக்கம், கொசு உற்பத்தி, விஷப்பூச்சி நடமாட்டம் உள்ளிட்டவைகளால் குழந்தைகளை வைத்துக்கொண்டு, அச்சத்துடன் வசித்து வருகிறோம். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: