4 விதமான திட்ட அறிக்கை தயார்: முக்கொம்பு புதிய கதவணை மின் உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்படுமா?

சென்னை: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கதவணையின் 48 மதகுகளில் 9 மதகுகள் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வெள்ளம் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது. இதை தொடர்ந்து கொள்ளிடம் வழியாக தண்ணீர் அதிகளவு வெளியேறியது. இதை தொடர்ந்து, 96 லட்சம் செலவில் நீர் வெளியேற்றத்தை தடுக்க தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், கொள்ளிடத்தில் புதிய கதவணை 435 கோடி செலவில் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதை தொடர்ந்து, நீர்வளத்துறை திட்டம் மற்றும் உருவாக்க தலைமை பொறியாளர் செல்வராஜூ ஆலோசகராக நியமிக்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்தது.  3 விதமான அறிக்கை தயார் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதில், ஒன்று 48 மதகுகளுடன் கூடிய கதவணை அமைப்பது, மற்றொன்று மதகுகள், இரண்டு சக்கர வாகன போக்குவரத்துடனும், 3வதாக கதவணை மற்றும் அனைத்து வாகனங்கள் செல்லும் வசதியுடன் கூடிய கதவணை கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. 4வதாக தேக்கி வைக்கும் நீரை மின் உற்பத்தி செய்யும் வகையில் அமைக்கப்படுகிறது.

தொடர்ந்து கதவணைக்கான திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரிப்பு பணிகளில் செல்வராஜூ தலைமையிலான குழு இறங்கியது. இக்குழுவினர் 4 விதமான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, அரசிடம் ஒப்படைத்துள்ளது. இதில், தற்போது உள்ள கதவணை போன்று அமைத்தால் கூடுதல் செலவு ஏற்படாது என்பதால், அந்த திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. அரசு ஒப்புதல் அளித்த பிறகு, நபார்டு வங்கி நிதியுதவி கோரி அனுப்பப்படும். அங்கு இந்த அறிக்கைக்கு அனுமதி கொடுத்தவுடன் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து அடுத்தாண்டு முதல் பணிகள் தொடங்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: