புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்டியல் பணத்தை நிவாரணமாக அளித்த அண்ணன், தங்கையால் நெகிழ்ச்சி

அரியலூர்: கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளால் இன்னும் மீள முடியாமல் டெல்டா உள்ளிட்ட 7 மாவட்டங்கள் தத்தளித்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக தங்கள் உண்டியல் பணத்தை கொடுத்த அண்ணன், தங்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கஜாவால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசு மட்டுமன்றி தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயக்குமாரின் குழந்தைகளான நிறைநெஞ்சன், சாதானா  இருவரும் முறையே  9 மற்றும் 4ம் வகுப்பு படித்து வருகின்றனர். தொலைக்காட்சிகளில் கஜா புயல் பாதிப்புகள் குறித்த உருக்கமான காட்சிகளைப் பார்த்து இருவருமே மனம் வருந்தியுள்ளனர். தங்களால் இயன்றதை செய்ய விரும்பிய நிறைநெஞ்சனும், சாதனாவும் தாங்கள் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்தனர். இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்த குழந்தைகள், தங்கள் உண்டியல் சேமிப்பான ரூ. 7,200 ரூபாயை கஜா புயல் நிவாரண நிதிக்காக அளித்தனர். சிறிய வயதிலேயே சேமிப்பது மிகவும் நல்ல பழக்கம். அதிலும் சேமித்த பணத்தை இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனமுவந்து அளித்த நிறைநெஞ்சனையும், சாதனாவையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் மனதார பாராட்டினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: