வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க பிளஸ் 2வில் 80% மதிப்பெண் தேவை என்ற உத்தரவுக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக மருத்துவக் கவுன்சிலில் தகுதிச் சான்றிதழ் பெற பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மருத்துவப் படிப்பிற்கு செல்லும் மாணவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலில் அங்கீகாரச் சான்றிதழ் பெற வேண்டும். வரும் ஆண்டு இந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்றும் மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தனக்கு தகுதிச் சான்று வழங்கக்கோரி தாமரைச்செல்வன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பிற்கு செல்லும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் வேதியியல், இயற்பியியல், உயிரியியல் ஆகிய பாடங்களில் 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 28ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, வெளிநாடுகளில் இளநிலை மருத்துவப் படிப்பு ஒழுங்குமுறை விதிகளுக்கு முரணாக தனி நீதிபதியின் உத்தரவு உள்ளது என்று வாதிட்டார். இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் ஆகியவை வரும் டிசம்பர் 17ம் தேதிக்குள் பதில் தருமாறு உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: