முன்னெச்சரிக்கை விடுத்ததால், மீனவர்கள் யாரும் கஜா புயலில் சிக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: கஜா புயலை முன்னிட்டு தமிழக மீனவர்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், புயல் கடுமையாக இருந்தாலும் மீனவர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலின் காரணமாக கடலோர மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முழுவீச்சில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி காவல் துறையினர், மற்றும் பேரிடர் மீட்பு குழு ஆகியோர் மூலம், மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இதையடுத்து ஏற்கனவே கடலுக்குள் மீன் பிடிக்க சென்றவர்களை திருப்பி வருமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

இதனால் எந்த மீனவர்களும் நடுக்கடலில் இல்லாத காரணத்தால், புயல் கடுமையாக இருந்தாலும் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு முழுமையாக முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக எந்த ஒரு மீனவரும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்த அவர், இதை தான் ஒரு மைல்கல்லாக பார்ப்பதாக அவர் கூறினார். ஆனால் 100ல் இருந்து 110 கி.மீ காற்று வேகத்தில் புயல் வீசியதால், நாகை, கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 3,33 மீனவ கிராமங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மொத்தமாக 4,926 விசை படகுகள் மற்றும் 18,364 நாட்டுப்படகுகள் காற்றின் வேகம் காரணமாக ஒன்றோடொன்று இடித்துக்கொண்டதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடல் உள்வாங்கியதன் காரணமாக சில படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாகவும் கூறினார். இதையடுத்து மீன்வளத்துறை, வருவாய்துறை மற்றும் அந்தந்த மாவட்ட அதிகாரிகள் கடலோர பகுதிகளுக்கு சென்று சேதங்களை கணக்கெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சேதங்கள் குறித்த முழு விவரங்களின் அடிப்படையில் அதற்கான நிவாரணங்கள் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: