இன்று தேசிய பத்திரிகை தினம்’: முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை: இன்று தேசிய பத்திரிகை தினம்’. இதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: உண்மை நிகழ்வுகளை மக்களுக்கு நடுநிலையோடு எடுத்துரைத்து, அவர்தம் அறிவுக்கண்ணை திறக்கும் உயரிய பணியை ஆற்றுவதால் பத்திரிகை துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க பத்திரிகை மற்றும் ஊடகத் துறையின் பணியினை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ம் தேதி தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில், அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.    

ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, 8,000 ரூபாயாக இருந்த பத்திரிகையாளர் ஓய்வூதியத்தை 10,000 ரூபாயாக உயர்த்தியது, பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியத்தை 4,750 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தியது, பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்கொடையின் உச்சவரம்பு மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்புகளை 2 லட்சத்தில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியது, பணிக்காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதியம் மூலம் வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைக்கான நிதியுதவியை 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்தியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை காலம் நேரம் பாராமல் உழைக்கின்ற பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சீரிய முறையில் செயல்படுத்தி பத்திரிகை மற்றும் ஊடகத் துறையின் காவலனாக விளங்கி வருகிறது.  

ஏழை எளிய மக்கள் வாழ்வில் வளம் பெற தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியினை சிறப்புற ஆற்றிவரும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை இந்த இனிய நாளில் பாராட்டி, அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேசிய பத்திரிகை தின வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: