சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தில் ஆஷா மையம் துவக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: தமிழகம்  முழுவதும், சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆஷா நடமாடும் விழிப்புணர்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இவர்கள் வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி  வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நீரிழிவு நோய் உயர்நிலை துறையின் புதிய கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நீரிழிவு நோய்க்கான அதிநவீன வசதிகளுடன்கூடிய புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைத்தனர். இதையடுத்து நீரிழிவு நோயின் ஆபத்தை உணர்த்தும் வகையில், சர்க்கரையில் அக்கரை  தலைப்பின் கீழ் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய, இருபது அணிகள் பங்கேற்ற உணவு திருவிழா போட்டியும்  நடைபெற்றது.

இதில் வரகு, சாமை, கேழ்வரகு, கோதுமை தானியங்களால் சமைக்கப்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றது. வெற்றி பெற்ற முதல் 3 அணிக்கு அமைச்சர்கள் பரிசு வழங்கி, பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் பயனாளிகளுக்கு சர்க்கரை நோய் விழிப்புணர்வு, மேலாண்மை கையேடு மற்றும் குளுக்கோ மீட்டர் கருவிகளையும் அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் புதுப்பிக்கப்பட்ட செவிலியர்கள் ஓய்வறையை திறந்து வைத்து அவர்களுடன்  அமைச்சர் விஜயபாஸ்கர் பல்லாங்குழி விளையாடினார். இந்த நிகழ்ச்சியில் அரசு ஸ்டான்லி  மருத்துவமனை முதல்வர் பொன்னம்பல நமச்சிவாயம், ஆர்.எம்.ஓ ரமேஷ்,  மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ரூ.10 கோடி செலவில் சர்க்கரை நோயை முன்கூட்டியே கண்டறியும் வகையில் அனைத்து துறைகள் அடங்கிய புதிய கட்டிடம் ஸ்டான்லி மருத்துவமனையில் திறக்கப்பட்டு உள்ளது. சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஆஷா நடமாடும் விழிப்புணர்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காலியாக உள்ள 1884 மருத்துவர் பணியிடங்களுக்கு டிசம்பர் 9ம் தேதி தேர்வு வைக்கப்பட்டு பணி ஆணை டிசம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: