கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நேரடியாக செல்ல முதல்வர் உத்தரவு : அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: கஜா புயலை எதிர்கொள்ள நேரடியாக சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட அந்தந்த மாவட்ட அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை, எழிலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது. கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் இன்று அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடுவார்கள். நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடல் நீர் உள்ளே புகும் ஆபத்து உள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் நிவாரண முகாமுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்துறை ஊழியர்கள் யாரும் விடுமுறை எடுக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் தயாராக உள்ளது. அதனால்தான் இன்று 6 மாவட்டத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நகரும் செல்போன் கோபுரங்கள்: தொலைதொடர்பு, எண்ணெய் நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.  அதன்படி, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பற்றாக்குறை வரக்கூடாது  என்பதற்காக அதிகளவில் இருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.  எரிபொருட்களை பதுக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி தகவல் தொடர்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதிப்புக்கு உள்ளாகாத மாவட்டங்களில் நகரும் செல்போன் கோபுரங்களை  புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல உறுதி அளித்துள்ளார்.  ஒரே நேரத்தில் பல்க் எஸ்எம்எஸ் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறினார்.

ஆரஞ்சு அலர்ட்: வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறும்போது, “இந்திய வானிலை ஆய்வு மையம், ரெட் கலர் கோடு என்று அறிவித்தால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருக்க வேண்டும் என்று அர்த்தம். தயவுசெய்து, ரெட் கலர் கோடு என்றாலே ஆபத்து என்று யாரும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு கலர் என்பது, தயாராக இருக்க வேண்டும் என்று அர்த்தம். தற்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு கோடு என்று அலர்ட் செய்துள்ளது. அதனால் தமிழக அரசு இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தயாராக உள்ளது. மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிலும், மாநில அளவில் 1070 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பாதிப்பு குறித்து தெரிவிக்கலாம்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: