அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு பழுதடைந்த சுவாச கருவி பொருத்தியதால் பெண் பலி

பெரம்பூர்: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், பெண் நோயாளிக்கு பழுதடைந்த சுவாச கருவி பொருத்தியதால் சிகிச்சையை பெற முடியாமல் பரிதாபமாக பலியானார். ராயபுரத்தை சேர்ந்தவர் குமாரி (50). நேற்று முன்தினம் குமாரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் உறவினர்கள் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கிட்னியில் பாதிப்பு இருப்பது தெரிந்தது. எனவே அவருக்கு உடனடியாக சுவாச பிரச்னைக்காக, வென்டிலேட்டர் கொண்டு வரப்பட்டது. ஆனால், அது பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதனை பணியில் இருந்த டாக்டர் அலெக்சாண்டர் கண்டித்துள்ளார். எனவே, அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் குமாரி இறந்துவிட்டார்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையின் டீன் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டீன் பொன்னம்பல நமச்சிவாயம் அவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மருத்துவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இறந்துபோன குமாரியின் உறவினர்கள் கூறுகையில், ‘‘மருத்துவமனையில் கருவி பழுதடைந்து உள்ளதால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியமால், எங்களது உறவினர் இறந்து உள்ளார். மருத்துவமனையில் பெரும்பாலான உபகரணங்கள் வேலை செய்யவில்லை. இதனால், உயிர் பலிகள் ஏற்படுகிறது. இனியாவது மருத்துவமனையில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்’’ என்றனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: