ஆவடி தொகுதியில் வெற்றியை எதிர்த்து திமுக வழக்கை ரத்து செய்யக்கோரிய அமைச்சரின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் நாசர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய கோரிய அமைச்சர் மாபா.பாண்டியராஜனின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 2016ல் நடந்த தமிழக சட்டப் பேரவைத் ேதர்தலில் ஆவடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாபா.பாண்டியராஜனும், திமுக சார்பில் ஆவடி நாசரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் நடந்த குளறுபடியால் குறைந்த  வாக்கு வித்தியாசத்தில் மாபா.பாண்டியராஜன் வெற்றி பெற்றார்.  இந்த வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆவடி நாசர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  ‘தேர்தலில்  முறைகேடு செய்தும், தேர்தல் அதிகாரிகளின் துணையோடும் பாண்டியராஜன் இந்த வெற்றியை பெற்றுள்ளார். எனவே, மாபா.பாண்டியராஜனின் வெற்றியை செல்லாது’ என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த  வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக வேட்பாளர் ஆவடி நாசர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாபா.பாண்டியராஜன் மனுத்தாக்கல் செய்தார்.  வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆவடி நாசர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது, வாக்காளர்களின் செல்போனுக்கு ரீசார்ச் செய்தது உள்ளிட்ட பல்வேறு  முறைகேடுகளை அரங்கேற்றி மாபா.பாண்டியராஜன் வெற்றி பெற்றுள்ளார். அதற்கான ஆவணங்கள் உள்ளன என்று வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் பாண்டியராஜனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நாசர் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.

ஓட்டுக்கு பணம் யார் கொடுத்தது, யாருக்கு, எந்த நேரத்தில் எந்த இடத்தில் வைத்து பணம் பட்டுவாடா செய்யப்பட்டது உள்ளிட்ட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த தேர்தல் வழக்கை விசாரிக்க போதுமான முகாந்திரம் உள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் பாண்டியராஜன் தேர்தல் வழக்கை சந்திக்க வேண்டும். விசாரணை வரும் 16ம் தேதிக்கு  தள்ளிவைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: