மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் பாலம் திறப்புக்கு முன்பே உடைந்த தடுப்பு தூண்கள்

ஆலந்தூர்: மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள குறுகிய பாலம் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெறும் முன்பே, தடுப்பு தூண்கள் உடைந்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  நந்தம்பாக்கம் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் அடையாறு ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் அகலம் குறைவாக இருந்ததால், கிண்டியில் இருந்து ராமாபுரம் வரையில் போக்குவரத்து நெரிசலால்  வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த சாலையில் ஐ.டி., நிறுவனங்கள், நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் என பல தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், குறுகிய பாலத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பணிக்கு செல்வோர் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

இப்பிரச்னைக்கு தீர்வாக, இந்த குறுகிய பாலத்தினை அகலப்படுத்தும் பணி, நெடுஞ்சாலை துறை சார்பில், ₹17 கோடி செலவில், கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 3 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த பாலத்தில் நடைபாதைக்கும், சாலைக்கும் இடையே கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தரமற்ற பணி காரணமாக இந்த தூண்கள் ஆங்காங்கே உடைந்து இரும்பு கம்பி நீட்டிக்கொண்டு இருக்கிறது.இதனால் நடைபாதையில் செல்வோர் தடுக்கிவிழும் நிலை உள்ளது. பாலம் திறப்பதற்கு முன்பே தடுப்புகள் உடைந்துள்ள சம்பவம், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இந்த பணிகளை சம்மந்தப்பட்ட  அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு தரமான  சிமென்ட் கலவை மூலம் தூண்களை அமைக்க உத்தரவிட வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: