திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 2ம் கட்ட ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளை 2வது கட்டமாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், தொல்லியல் துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தியாகராஜர் சுவாமி ஆலயத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் உள்ள ஆலயங்களுக்கு சொந்தமான 4,350 ஐம்பொன் சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆலயங்களில் திருவிழாக்களின்போது பாதுகாப்பு மையத்தில் இருந்து சிலைகள் கொண்டு செல்லப்பட்டு திருவிழா முடிந்தவுடன் மீண்டும் கொண்டுவரப்படுவது வழக்கம். இதுபோன்ற நேரங்களில், வெளியே கொண்டுசெல்லப்படும் சுவாமி சிலைகள் மாற்றப்பட்டு போலி சிலைகள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.

இதையடுத்து கடந்த மாதம் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிலைகளின் உண்மை தன்மை குறித்து பொன். மாணிக்கவேல் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் தொல்லியல் துறையினர் இணைந்து ஆய்வு நடத்தினர். அப்போது 163 சிலைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் பாதுகாப்பு மையத்தில் 2ம் கட்ட ஆய்வை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எ.டிஸ்.பி ராஜாராமன் மற்றும் தொல்லியியல் துறையைச் சேர்ந்த தென்மண்டல இயக்குநர் நம்பி ராஜன் தலைமையில் சிலைகளின் உண்மை தன்மை குறித்து 10க்கும் மேற்பட்டோர் ஆய்வு பணி செய்து வருகின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த ஆய்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: