18 அதிமுக எம்எல்ஏக்கள் நீக்கம் தீர்ப்பு எதிரொலி டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மேலும் 3 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு?தகுதி நீக்கம் செய்ய முதல்வர், துணை முதல்வர் தீவிரம்

சென்னை: டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று தீர்ப்பு வந்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து வரும் 3 எம்எல்ஏக்களையும் நீக்குவதற்கு  முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்துகின்றனர். தினகரனுக்கு ஆதரவாகவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் செயல்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால்  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார். சபாநாயகரின் முடிவை எதிர்த்து, 18 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்ற வழக்கில், நேற்று முன்தினம்  தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இது, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  மற்றும் அமைச்சர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களை தொடர்ந்து, தற்போது அதிமுக எம்எல்ஏக்களாக உள்ள ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி),  கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய மூன்று பேர் இப்போதும் டி.டி.வி.தினகரனுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த மூன்று பேரும் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகம் சார்பில்  நடைபெறும் எந்த கூட்டத்திலும் பங்கேற்பது இல்லை. அதேநேரம், டி.டி.வி.தினகரன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். ஆனாலும், இவர்கள் மூன்று பேரும் அதிமுக எம்எல்ஏக்களாகவே தொடருகிறார்கள்.

தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதால், டி.டி.வி.தினகரனுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் 3 அதிமுக எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய எம்எல்ஏக்களுக்கும் அதிமுக கட்சி சார்பில்  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட 3 எம்எல்ஏக்களும் சரியான விளக்கம்  அளிக்காதபட்சத்தில், அரசு கொறடா ராஜேந்திரன் மூலம் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தனபாலிடம் விரைவில் கடிதம் கொடுக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

அப்படி, சபாநாயகர் மூலம் கடிதம் கொடுத்து டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 3 அதிமுக எம்எல்ஏக்களையும் அடுத்தக்கட்டமாக தகுதி நீக்கம் செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிமுக  தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் மூன்று எம்எல்ஏக்களும் கொஞ்சம்  அவரிடம் இருந்து விலகியே இருக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருணாஸ் எம்எல்ஏ நிலை?

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த எம்எல்ஏ கருணாசும் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அவரது தலைமையிலான அரசுக்கும் எதிராக பேசி வருகிறார்.  இதனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதனால், 18 எம்எல்ஏக்களை தொடர்ந்து கருணாஸ் எம்எல்ஏவுக்கும் சபாநாயகர் மூலம் விரைவில்  நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். சரியான விளக்கம் அளிக்காதபட்சத்தில் கருணாஸ் எம்எல்ஏவையும் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: