தாமிரபரணி மஹா புஷ்கர விழா நிறைவு : 15 நாட்களுக்கு பிறகு வெறிச்சோடிய தீர்த்த கட்டங்கள்

நெல்லை: தாமிரபரணி மஹா புஷ்கர விழா நிறைவு பெற்றதால் 15 நாட்களுக்கு பின்னர் அனைத்து தீர்த்த கட்டங்களும் வெறிச்சோடின. பல்வேறு இடங்களில் மலை போல் குவிந்து கிடந்த பழைய துணிகள், காலணிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை குலுங்க வைத்த தாமிரபரணி மஹா புஷ்கரவிழா கடந்த 11ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் (23ம் தேதி) வரை நடந்தது. விழாவுக்கு சில தினங்களுக்கு முன்னரே நதிக்கரைகள் களைகட்டத் துவங்கின.

நெல்லை, தூத்துக்குடி இதுவரை கண்டிராத இந்த புதிய விழா நாட்களில் லட்சக்கணக்கான வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் வந்து தாமிரபரணியில் புனித நீராடிச் சென்றனர். வெளிமாவட்ட மக்களின் வருகை தாமிரபரணியின் மகத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தது. நிறைவுநாளான கடந்த 23ம் தேதியும் லட்சக்கணக்கானோர் தீர்த்த கட்டங்களுக்கு திரண்டுவந்து புனித நீராடினர். இவ்வாறு மஹா புஷ்கரத்தையொட்டி நேற்று முன்தினம் வரை கடந்த 15 நாட்களாக களை கட்டியிருந்த தாமிரபரணி தீர்த்த கட்டங்கள் நேற்று வெறிச்சோடின. ஒரு சில தீர்த்த கட்டங்களில் நேற்றும் வெளியூர் மக்கள் குறைந்த அளவில் வந்து நீராடியதை காணமுடிந்தது.

ஆனால், போலீஸ், தீயணைப்பு படையினரின் பாதுகாப்பு ஏதும் இல்லை. விழாவிற்கு அமைக்கப்பட்டிருந்து கொடி, தோரணங்கள் வளைவுகள், மின்விளக்குகளும் அகற்றப்பட்டன. மாநகராட்சியினர் அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவைகளும் அப்புறப்பட்டுத்தப்பட்டன. நீராட பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட தடுப்புகள், மணல் மூடைகளும் அகற்றும் பணி நடந்தது. இதனால் தீர்த்தகட்ட படித்துறை பகுதிகள் அமைதியாக காட்சியளித்தன. படித்துறைகள் வெறிச்சோடிய நிலையில் பக்தர்கள் விட்டுச்சென்ற பழைய துணிகளும், காலணிகளும் மலைபோல் குவிந்து கிடந்தன. இதையடுத்து இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சியினர்  தீவிரமாக ஈடுபட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: