கடந்த 12 நாட்களாக கோலாகலமாக நடைபெற்று வந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா நிறைவு: 50 லட்சம் பேர் நீராடினர்

நெல்லை: தாமிரபரணி மகா புஷ்கர விழா நேற்றோடு நிறைவு பெற்றது. தாமிரபரணி ஆற்றங்கரைகளில் 12 நாட்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11ம் தேதி தொடங்கியது. நேற்று வரை 12 நாட்களாக தொடர்ந்த விழாவில், ஒவ்வொரு நாளும் ஆற்றில் குவிந்த கூட்டம் கணக்கில் அடங்காதது. தாமிரபரணி புஷ்கர விழா கமிட்டியினர் 12 நாளில் சுமார் 50 லட்சம் பேர் நீராட வருவர் என எதிர்பார்த்தனர். ஆனால் விழாவுக்கு வந்த கூட்டம் அதையும் தாண்டியது. தீர்த்த கட்டங்கள் என சிலவற்றை குறிப்பிட்டிருந்தாலும், ஆற்றில் அனைத்து இடங்களிலுமே கூட்டத்தை காண முடிந்தது. அதிலும் கடந்த வியாழன் முதல் ஞாயிறு வரையிலான விடுமுறை காலத்தில் தாமிரபரணி உச்சபட்ச கூட்டத்தை எதிர்கொண்டது. முறப்பநாடு தீர்த்தக்கட்டத்தில் குளிக்க திரண்ட கூட்டத்திற்காக நான்கு வழிச்சாலையில் ஒருவழிப்பாதையை அடைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பாபநாசம், அம்பை, முக்கூடல், திருவிடைமருதூர், நெல்லை, முறப்பநாடு, வைகுண்டம், ஏரல் உள்ளிட்ட தீர்த்தக் கட்டங்களில் தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். சில தீர்த்தக்கட்டங்களில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேலாக கூட்டத்தை பார்க்க முடிந்தது. பிரம்மமுகூர்த்த காலத்தில் நீராடுதல் நலம் என்பதால் தாமிரபரணியில் கடந்த 12 தினங்களாக அதிகாலை 4 மணிக்கே புனித நீராடிய கூட்டம் அதிகம். தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் மக்கள் திரண்டனர். மேலும் துறவியர்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் என தாமிரபரணியை முற்றுகையிட்டதால் அவர்களுடன் பெருங்கூட்டமும் ஆற்றங்கரைக்கு வந்தது. 144 ஆண்டுகளுக்கு முன்பு மகா புஷ்கரம் நடந்ததற்கு சரித்திர சான்றுகள் உள்ளதா, கங்கை போல் தாமிரபரணி ஆறும் அசுத்தமாகும், மழையால் ஆற்றில் வெள்ளம் வரும், உயிர்பலி அதிகமாகும் என பல்வேறு விமர்சனங்கள் விழாவிற்கு முன்பாக எழுப்பப்பட்டன. ஆனால் அதையெல்லாம் மீறி புஷ்கர விழா நேற்றுடன் அமைதியாக நிறைவு பெற்றது.

ஆண்டுதோறும் 3 நாட்கள் திருவிழா கொண்டாட முடிவு

வற்றாத ஜீவநதியாக உள்ள தாமிரபரணிக்கு ஆண்டுதோறும் நன்றி அறிவிப்பு விழா கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் பல்வேறு தரப்பினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டாடுவதால் நதி நீர் மாசு தடுக்கவும் நதியை போற்றி பாதுகாக்கவும் உதவும். மேலும் இந்த விழாவை அரசே குறைந்தது ஆண்டுக்கு ஒரு வாரமாவது கொண்டாடி சிறப்பிக்க வேண்டும் எனவும் பலர் எதிர்பார்க்கின்றனர். தாமிரபரணி புஷ்கர விழாவை கொண்டாடிய ஆன்மிக குழுவினரும், ஆண்டுதோறும் குறைந்தது 3 நாட்கள் தாமிரபரணி அன்னைக்கு திருவிழா கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெரியோர்களுடன் ஆலோசித்து அந்நாட்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: