தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு: லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

நெல்லை: தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தீர்த்தகட்டங்களில் நேற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று 12வது நாளையொட்டி பாபநாசம், அம்பை, திருப்புடைமருதூர், முக்கூடல், நெல்லை குறுக்குத்துறை, தைப்பூச மண்டப படித்துறை,  வண்ணார்பேட்டை, மணிமூர்த்தீஸ்வரம், ஜடாயு தீர்த்தம், சீவலப்பேரி படித்துறைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். ஏராளமானோர் டவுனில் உள்ள நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். இதனால்  கோயிலில் நேற்றும் கூட்டம் அலைமோதியது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக தாமிரபரணியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறுக்குத்துறையில் போலீசாரின் தற்காலிக கண்காணிப்பு கூடார பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. நீரின்  வேகம் அதிகரித்ததால் கூடுதல் கவனத்துடன் நீராட பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர். நெல்லை மாநகர தீர்த்தக்கட்டங்கள் தவிர நெல்லை அருகே உள்ள கோடகநல்லூர், மேலச்செவல், கோபாலசமுத்திரம், சுத்தமல்லி, ஊர்க்காடு,  கல்லிடைகுறிச்சி, தென்திருபுவனம், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு, திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஆத்தூர், ஏரல், பழைய புன்னக்காயல் உள்ளிட்ட 140 தீர்த்தக்கட்டங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடினர்.கடந்த  11ம் தேதி முதல் தொடர்ந்து நடந்து வந்த மகா புஷ்கர விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்றும் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராட குவிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: