ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பயணிகள் கடும் பீதி

சென்னை: சென்னைக்கு நேற்று காலை வந்த ஜோத்பூர் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு நிலவியது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வழியாக மன்னார்குடி செல்லும் விரைவு ரயில் நேற்று காலை 9 மணியளவில் அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து எண்ணூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, இந்த ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பெருநகர சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் தகவல் வந்தது. இதுகுறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ரயிலை எண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தும்படி டிரைவருக்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும், ரயில்வே போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில், ஜோத்பூர் ரயில் நேற்று காலை 9.30 மணியளவில் எண்ணூர் ரயில் நிலையத்தில் அவசரமாக நிறுத்தப்பட்டது. பின்னர் ரயிலில் வந்த பயணிகளை ரயில்வே போலீசார் கீழே இறங்கும்படி அறிவுறுத்தினர். திடீரென ரயிலில் இருந்து எதற்காக இறங்கச் சொல்கிறார்கள்என பயணிகள் முதலில் குழம்பினர்.

பின்னர் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் பற்றிய விவரம் அறியவே, பயணிகள் அவசரம்அவசரமாக கீழே இறங்கி நின்றனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து ரயிலின் அருகே யாரும் செல்லாதபடி பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து,  ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் நவீன கருவிகள் மூலம் வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை செய்தனர். காலை 11.30 மணியளவில் அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடந்து முடிந்தது. வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. வெறும் புரளி என தெரியவந்ததை அடுத்து, பயணிகள் அனைவரும் ரயில் பெட்டிக்குள் ஏறினர். இதையடுத்து ரயில் புறப்பட்டு சென்றது. பின்னர் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு ஜோத்பூர் ரயில் வந்ததும் அங்கும் போலீசார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: