ஆங்காங்கே குழியாக காணப்படுகிறது ‘கண்டமாகி’ வரும் பாம்பன் சாலை பாலம்

ராமேஸ்வரம் : பாம்பன் சாலைப் பாலத்தில் புதிதாக போடப்பட்ட தார்ச்சாலை கற்கள் பெயர்ந்து சேதமடைந்து வருகிறது. இதனை உடனே சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி  உள்ளனர். பாம்பன் சாலைப்பாலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் ரூ.பல கோடி செலவில் மராமத்து பணிகள் செய்யப்பட்டது. அப்போது பாலத்தின் மேல் சேதமடைந்த நிலையில் இருந்த சிமென்ட் கான்கிரீட் சாலையின் மேல் புதிதாக தார்ச்சாலையும் அமைக்கப்பட்டது. இந்த சாலை வழுக்கும் தன்மையுடன் இருந்ததால் பாலத்தில் வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்தது.  

கார், பஸ், இருசக்கர வாகன ஓட்டிகளும் பாலத்தில் வாகனங்களை ஓட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். பொதுமக்கள் தரப்பில் இருந்து அடிக்கடி புகார் எழுந்ததால் புதிதாக அமைக்கப்பட்ட வழுக்கும் தன்மை கொண்ட சாலை முற்றிலும் அகற்றப்பட்டு புதிதாக தார்ச்சாலை போடப்பட்டது. பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் புதிய தார்ச்சாலையில் பல இடங்களில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து வருகிறது. சாலையின் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் செல்லச்செல்ல சிறிது சிறிதாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து வட்ட வடிவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கான்கிரீட் சாலையில் இருந்த கற்கள் வெளிய தெரிகிறது.

நாளாகநாளாக இதன் மேல் வாகனங்கள் சென்றால் சிமென்ட் கான்கிரீட் தளமும் பெயர்ந்து சாலையில் ஓட்டை ஏற்பட்டு விடும். பாம்பன் பாலத்தின் தார்ச்சாலையில் பல இடங்களில் இது போல் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்து வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்து வரும் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: