இலங்கை அரசு கொண்டு வந்த புதிய சட்டம்பற்றி தெரியாது: இலங்கை அமைச்சர் பரபரப்பு பேட்டி

சென்னை: தற்போது இலங்கை அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டம் பற்றி தெரியாது என இலங்கை அமைச்சர் சாமிநாதன், செய்தியாளர்களிடம் கூறினார். இலங்கை அமைச்சர் சாமிநாதன், கொழும்பில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்திய, இலங்கை மீனவர் பிரச்னை புதிதானதல்ல. பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இருநாட்டு மீனவர்களும் நெருங்கிய நண்பர்கள். அவ்வப்போது பிரச்னை ஏற்படும். கைது செய்யப்படுவார்கள். அதன்பின்பு விடுதலையாகி வருவார்கள். தற்போது இலங்கை அரசு, கொண்டு வந்துள்ள புதிய சட்டம் பற்றி தெரியாது. அதுபற்றி தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் என்னால் கூற முடியாது. புதிய சட்டத்தின்படி கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விடுதலைபற்றி அமைச்சரவைதான் முடிவு எடுக்க வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் இப்போது நல்ல நிலையில் உள்ளனர். இலங்கை ராணுவ பராமரிப்பில் இருந்த 82 சதவீத நிலங்கள் மீண்டும் தமிழர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள இடங்களும் வரும் டிசம்பர் 31க்குள் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.  சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்வதில் எந்தவித பிரச்னையும் இருக்க கூடாது. ஏனென்றால் தெய்வம் என்பது ஆண், பெண் இருபாலருக்கும் சமமானது. அப்படி இருக்கையில், ஆண்கள் மட்டும்தான் கோயிலுக்கு செல்லலாம், பெண்கள் செல்ல கூடாது என்பது ஒருவித பாரபட்சமானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தெய்வங்களான சிவன், விஷ்ணு, முருகன் அனைவருக்கும் மனைவிகள் உள்ளனர். அப்படி இருக்கையில் பெண்கள் கோயிலுக்கு செல்வதில் என்ன தவறு. சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்வது கிடையாது என்று ஒரு வழக்கம் இருந்தால் அதை மாற்றி அமைக்க வேண்டும். அதுதான் சரியானதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: