தகாத வார்த்தையால் இன்ஸ்பெக்டர் திட்டியதாக புகார்: காவல் நிலையத்தில் தூக்கிட்டு எஸ்எஸ்ஐ தற்கொைல முயற்சி: திண்டுக்கல் அருகே பரபரப்பு

பட்டிவீரன்பட்டி: இன்ஸ்பெக்டர் தகாத வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்த சிறப்பு எஸ்ஐ, போலீஸ் ஸ்டேஷனிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் திண்டுக்கல் அருகே தாண்டிக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றுபவர் முருகேசன். நேற்று காலை 8 மணி அணிவகுப்பின்போது முருகேசனை, இன்ஸ்பெக்டர் சுபக்குமார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மனமுடைந்த முருகேசன் போலீஸ் ஸ்டேஷனில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனே சக போலீசார் தடுத்து முருகேசனை காப்பாற்றினர்.

முன்னதாக முருகேசன், ஸ்டேஷனில் உள்ள அறிவிப்பு பலகையில் தற்கொலைக்கான காரணம் குறித்து சாக்பீசால் எழுதியுள்ளார். அதில், ‘போலீஸ் அனைவரும் ....... பயல்கள் என்று திட்டினார். எனது சாவுக்கு காரணம் ஆய்வாளர் சுபக்குமார்’ என்று எழுதி இருந்தார். தகவலறிந்ததும் கொடைக்கானல் டிஎஸ்பி பொன்னுச்சாமி, பட்டிவீரன்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு முருகேசனை வரவழைத்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்று எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து முருகேசன், எஸ்பி சக்திவேலை சந்திக்க திண்டுக்கல் சென்றுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தாண்டிக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: