கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மைல்கல்லில் இந்தி அழிப்பு போராட்டம்: 31 பேர் கைது

பொள்ளாச்சி:பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் எழுதப்பட்ட இந்தி எழுத்தை அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி -கோவை இடையேயான 39 கி.மீ தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. தற்போது ரோடு விரிவாக்கம்  செய்யப்பட்ட  பல இடங்களில் ஊர் பெயர் மற்றும் தொலைவு உள்ளிட்டவற்றை எழுத மைல் கற்கள் வைக்கப்பட்டுள்ளது.  இதில் பொள்ளாச்சி மற்றும் ஆச்சிப்பட்டி, தாமரைக்குளம், கோவில்பாளையம், கிணத்துக்கடவு, ஒத்தைக்கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட மைல் கற்களில்  இந்தி எழுத்து இடம் பெற்றது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்  எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  

இந்நிலையில் நேற்று பொள்ளாச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் எழுதப்பட்ட இந்தி எழுத்தை அழிக்கும் போராட்டம், பொள்ளாச்சி காந்தி சிலை அருகே துவங்கியது.  ததிக  பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் திமுக, விடுதலைசிறுத்தைகள், ஆதிதிராவிடர் பேரவை, மதிமுக, தமுமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள்  பங்கேற்றனர். அவர்கள், “மைல் கற்களில் உள்ள இந்தி எழுத்துக்களை முழுமையாக அழிக்க வேண்டும். தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டிக்கிறோம்.  தமிழக மக்கள் ஒருபோதும் இந்தி மொழியை ஏற்க மாட்டார்கள்’’ என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.  பின் போராட்டகாரர்கள், கையில் வைத்திருந்த பதாகையில் இருந்த இந்தி எழுத்தை தார்பூசி அழித்து தங்கள் எதிர்ப்பை காட்டினர். மேலும், மைல் கற்களில் உள்ள இந்தி மொழியை அழிப்பதற்காக  ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை கைது செய்தனர்.  முன்னதாக நேற்று முன்தினம் இரவே சிலர் கிணத்துக்கடவு அருகே மைல் கற்களில் இருந்த இந்தி எழுத்தை தார் பூசி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: