ஸ்ரீரங்கம் கோயில் நவராத்திரி விழாவில் மவுத் ஆர்கன் வாசித்த யானை ஆண்டாள்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 10ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஆரியபட்டாள் வாசல் அருகே கொலு மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கநாச்சியார் தினமும் மாலை 6.45 மணிக்கு மேல், மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொலு மண்டபம் வந்தடைகிறார். இரவு 7.45 முதல் 8.45 வரை கொலு மண்டபத்தில் தாயார் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். நவராத்திரி விழாவில் யானை ஆண்டாள் நொண்டியடித்தபடி மவுத் ஆர்கன் வாசிக்கும் நிகழ்ச்சி கடந்த ஆண்டுகளுக்கு முன் வரை வழக்கத்தில் இருந்தது.  

யானை துன்புறுத்தப்படுவதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் நொண்டியடிக்கும் முறை கைவிடப்படடது. மவுத் ஆர்கன் வாசிக்கும் முறை மட்டும் நடைமுறையில் உள்ளது. நேற்று 3ம் நாள் விழாவில் ஆண்டாள் மவுத் ஆர்கன் வாசித்தது. யானைக்கு அலங்காரம் செய்யப்பட்டு கொலுசுகள் அணிவிக்கப்பட்டிருந்தன. தாயாருக்கு ஆண்டாள் யானை சாமரம் வீசி மவுத் ஆர்கன் வாசித்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு வியந்தனர். இதை பக்தர்கள் செல்போன்களில் வீடியோ, படம் எடுத்தனர். விழா வரும் 19ம் தேதியுடன் நிறைவடைகிறது. ‘யானை நொண்டியடிப்பது போன்ற வீடியோவை சிலர் வாட்ஸ்அப், முகநூலில் பரப்பி வருகின்றனர். இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள படம் தற்போது வைரலாக பரவி வருகிறது’ என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: