குலசையில் தசரா திருவிழா நாளை துவக்கம்

உடன்குடி : மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (10ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு  காளிபூஜை, மாலை 5 மணிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை, புஷ்பாஞ்சலி நடந்தது. தசரா  திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை துவக்கினர். நாளை (10ம்  தேதி) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம்  வீதியுலாவும், காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணிக்கு  கொடியேற்றமும் நடக்கிறது. தொடர்ந்து விரதமிருந்து வேடமணியும் பக்தர்கள்  காப்பு கட்டும் வைபவம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாளை  முதல் ஒவ்வொரு நாள் இரவும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா  வருகிறார். 10ம் நாளான 19ம் தேதி காலை 10.30மணிக்கு மகா அபிஷேகமும், இரவு  11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர  நிகழ்ச்சியாக அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோயிலுக்கு  முன்பு எழுந்தருளி மகிசாசூரசம்ஹாரம் நடக்கிறது.

தசரா திருவிழாவிற்கென பக்தர்கள் விரதம் மேற்கொள்வர். விரதம் மேற்கொள்ளுபவர்கள் கொடியேற்றம் நிகழ்ந்த பின் திருக்காப்பு எனும் மஞ்சள் கயிறு அணிந்து கொள்வர். தனி நபர் அல்லது தசரா குழுக்களாகவும் வந்து கோயிலில் வைத்து அணிந்து கொள்வது வழக்கம். இதன் பின்னர் தங்களுக்கு பிடித்த வேடமணிந்து ஊர், ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து வழக்கம். காளி, பார்வதி, பரமசிவன், முருகர், கிருஷ்ணர், போலீஸ்காரர், பெண், கும்பகாரி, அனுமன், குரங்கு, கரடி, புலி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து பக்தர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குழுக்களாகவே அல்லது தனி நபர்களாகவோ சென்று காணிக்கை வசூல் செய்வர்.

தற்போது வேடம் அணியும் பக்தர்களுக்கு அலங்கார பொருட்கள் செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தலைகீரிடம், கண்மலர், வாள், ஈட்டி, திரிசூலம், கத்தி, ஒட்டியாணம், வேல், ஜடாமூடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் குறிப்பாக காளி உள்ளிட்ட சுவாமி வேடம் அணியும் பக்தர்களில் பலர் தங்களுக்கென முன்கூட்டியே வேட அலங்கார பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் தலைக்கீரிடம் வீரப்பல் உள்ளிட்ட கலைநயமிக்க பொருட்களை தயாரிக்க முன்பதிவு செய்து விடுகின்றனர். மேலும் பெண்வேடம், காளி உள்ளிட்ட சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் தங்கள் தலையில் அளவுக்கேற்றார் போல் டோப்பா முடிகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்போதே பக்தர்கள் டோப்பா முடிகள் தங்கள் அளவுக்கு ஏற்றார் போல் வாங்கி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: