2ம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது: கல்வித்துறை அறிவிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க கூடாது என்ற உத்தரவை அமல்படுத்துவதை தமிழக பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்க கோரி வக்கீல் புருஷோத்தமன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், சிபிஎஸ்இ பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக் கூடாது என்று அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறு சிபிஎஸ்இ இயக்குநரகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், என்சிஇஆர்டி வழங்கும் புத்தகங்களையே சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அந்த பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும், தமிழக பள்ளிக்கல்வித்துறையும் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் தமிழகத்தில் மாநில பாட திட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  இந்த வழக்கு நேற்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ஒரு சுற்றறிக்கையை தாக்கல் செய்தார்.அதில், தமிழக பள்ளிகளில் 2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க கூடாது என முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கூடுதல் புத்தகச் சுமை இருக்கக்கூடாது என்பது கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றறிக்கை அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

 சுற்றறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 2ம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் தரப்படுகிறதா, இல்லையா, வீட்டுப் பாடம் தரக்கூடாது என்ற உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா, தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் மாணவர்களுக்கு என்சிஇஆர்டி பாடப்புத்தகங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து வரும் அக்டோபர் 9ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: