அரியமங்கலம் வாய்க்கால் அடைப்பு வீடுகளில் தண்ணீர் புகுந்தது; விடிய விடிய மக்கள் தவிப்பு

திருச்சி : திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் பெட்டவாய்த்தலையில் காவிரியிலிருந்து பிரிந்து பாசன வாய்க்காலாக திருச்சி மாநகருக்குள் நுழைந்து  71 கிமீ நீளம் திருவெறும்பூர் வழியாக வந்து புத்தூர் ஆறுகண் பாலத்திலிருந்து திருச்சி மாநகராட்சி பகுதிகள் வழியாக வாழவந்தான்கோட்டை கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து நீட்டிப்பு வாய்க்காலாக தஞ்சை மாவட்டம் பூதலூர் வட்டம் சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது. இதன் மூலம் 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

திருச்சி அரியமங்கலம் பகுதியில் செல்லும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறக்க ஷட்டர் உள்ளது. இந்த ஷட்டரில் திறக்கப்படும் தண்ணீர் சுமார் 5 அடி அகலம் உள்ள கிளை வாய்க்கால் மூலம் சென்று அப்பகுதியில் உள்ள விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.  நேற்று இந்த ஷட்டரில் கிளை வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடைக்கு செல்லாததால் தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது.  ஆனால் கிளை வாய்க்கால் தூர்வாரப்படாததால்  கேபிள் ஒயர், பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்துக்கொண்டதால் தண்ணீர் கரைகளில் வழிந்து வண்ணாந்துறை, லெட்சுமிபுரம் 3வது மற்றும 4வது தெருக்களில் தண்ணீர் வீடுகளை சூழ்ந்தது. தாழ்வாக உள்ள 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பொருட்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். இரவில் உறவினர்கள் வீடுகள்,  பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். பலர் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் விடிய விடிய அப்புறப்படுத்தினர்.  

முன்னறிவிப்பு இல்லாமல் உய்யக்கொண்டான் வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டது.   பொதுமக்களே வாய்க்கால் அடைப்பை சுத்தம் செய்ததால் தண்ணீர் இன்று காலை தான்  வடிந்தது. இருப்பினும் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சேறும் சகதியுமாக உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், லெட்சுமிபுரம் மெயின்ரோட்டிலிருந்து வாய்க்கால் நுழையும் இடத்தில் கேபிள் ஒயர்கள் இருப்பதால் அங்கு குப்பைகள் தேங்கி வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டது. விடிய விடிய தண்ணீரில் தத்தளித்தோம்.  அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அதிகாலை 3 மணி அளவில் தான் தண்ணீர் வடிந்தது. இனி இதுபோல் பிரச்னை ஏற்படாமல் இருக்க வாய்க்காலை தூர் வாரி கரைகளில் தடுப்பு அமைக்க வேண்டும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: