×

ஓமலூர் வட்டாரத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு ஒரு லட்சம் செங்கல் அனுப்பி வைப்பு : விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி

ஓமலூர்: ஓமலூர் சுற்றுவட்டாரங்களில் இருந்து கேரளாவுக்கு செங்கற்கள் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. தேவை காரணமாக விலை அதிகரித்துள்ளதால் செங்கல் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரங்களில் ஆயிரக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு சராசரியாக 60 ஆயிரம் முதல் 1.25 லட்சம் வரை செங்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த செங்கல் சூளைகள் முன்பு வயல்களில் சுமார் 4 அடி வரை மண் எடுக்கவும், வற்றும் குளங்களில் இருந்து மண் எடுக்கவும், கனிமவளத்துறை அனுமதி வழங்கி இருந்தது. தற்போது சேலம் மாவட்டத்தில் மண் எடுக்க கனிமவளத்துறை அனுமதி வழங்கவில்லை.

இதனால் ஓமலூர் வட்டார செங்கல் சூளை உரிமையாளர்கள், தனியாரிடம் இருந்து செங்கல் சூளைக்கு தேவையான மண் வாங்குகின்றனர். ஒரு டெம்போ மண் 1,900 க்கு வாங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு செங்கல் 4.25 க்கு விற்கப்பட்டது. இங்குள்ள சூளைகளில் தரமான செங்கற்கள் சரியான விலையில் கிடைப்பதால், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் செங்கல் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த கட்டடங்களை சீரமைக்கும் பணிகள், மும்முரமாக தொடங்கியுள்ளன.

இதற்காக ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஒரு லட்சம் செங்கற்கள் அனுப்பப்படுகிறது. சீரமைப்பு பணிக்காக ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் சுமார் 30 லாரிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான செங்கற்கள் கேரளாவிற்கு செல்கிறது. தேவை அதிகரிப்பால் செங்கல் விலை உயர்ந்து, தற்போது ஒரு செங்கல் 5.50 க்கு விற்கப்படுகிறது. இதனால், செங்கல் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Omalur, Kerala, merchants
× RELATED சென்னையில் உள்ள 1,373 பேருந்து...