சுதந்திர தினத்தையொட்டி பாம்பன் பாலத்தில் பலத்த பாதுகாப்பு : கோயில், கடற்கரையிலும் தீவிர கண்காணிப்பு

ராமேஸ்வரம்: சுதந்திரதினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில், கடற்கரையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோயில், பாம்பன் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலும், கடல் பகுதியிலும் மத்திய, மாநில பாதுகாப்பு ஏஜென்சிகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாம்பன் ரயில் பாலத்தில் நேற்று ஆயுதம் தாங்கிய போலீசார் ரோந்து வந்தனர். மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு வெடிகுண்டு சோதனை செய்தனர்.

பாம்பன் சாலைப்பாலம், ரயில் நிலையம், ராமேஸ்வரம் பேருந்து நிலையம், அக்னிதீர்த்த கடற்கரை என மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ராமநாதசுவாமி கோயிலில் வழக்கமாக பணியில் இருக்கும் போலீசாருடன் ஆயுதப்படை போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்பே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ராமேஸ்வரம், முகுந்தராயர் சத்திரம், தனுஷ்கோடி, பாம்பன், குந்துகால் உள்ளிட்ட கடலோர பகுதியிலும் புலனாய்வு துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில், பேருந்து நிலையம் போன்றவற்றில் சந்தேகப்படும் வகையில் பொருட்கள் கிடந்தாலும், கடல் மற்றும் கடற்கரையில் சந்தேகப்படும் வகையில் அன்னிய படகுகள், அந்நியர்களை பார்த்தாலும் பொதுமக்கள் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: