வேலையை காட்டியது ‘ஸ்லீப்பர் செல்’: பாஜவுக்கு ஓட்டுப் போடாமல் டிமிக்கி கொடுத்த 4 எம்பிக்கள்

சென்னை: மத்திய பாஜ அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுகவின் 37 எம்பிக்களில், 4 பேர் வாக்களிக்காததால், அவர்கள் ‘ஸ்லீப்பர் செல்’ எம்பிக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது, மத்திய பாஜ அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் எம்பி நிவாஸ், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். இதேபோல், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பிலும் தனித்தனியாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 20ம் தேதி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில், பாஜ அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்தன. அரசுக்கு எதிராக 126 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் பாஜ அரசு எளிதில் வெற்றி பெற்றாலும் கூட, எதிர்பார்த்த வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கவில்லை. அதேபோல், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதாக உத்தரவாதம் அளித்த கட்சிகளில் சில எம்பிக்கள் வாக்களிக்கவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, மொத்தம் 312 எம்பிக்கள் கைவசம் உள்ளனர். ஆனால், சிவசேனா கட்சி வெளிநடப்பு செய்ததால் அக்கட்சியைச் சேர்ந்த 18 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை. அதனால், 294 எம்பிக்கள் மட்டுமே கூட்டணியில் இருந்தனர். அதிமுக ஆதரவு அளித்ததால், அக்கட்சி எம்பிக்கள் 37 பேரையும் சேர்த்து, மொத்தம் 331 வாக்குகள் ஆளும் கூட்டணிக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 325 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிடம் 144 எம்பிக்கள் கைவசம் இருந்தனர். ஆனால், பதிவான வாக்குகள் 126 மட்டுமே. இங்கேயும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த சில கட்சிகள் கடைசி நேரத்தில் தங்களது நிலைப்பாட்டை விலக்கிக் கொண்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், ‘அதிமுகவின் 37 எம்பிக்கள் பாஜ அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 4 எம்பிக்கள் வாக்களிப்பை புறக்கணித்தது அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில் பிரபலமாக பேசப்படும் அதிமுகவில் உள்ள ‘ஸ்லீப்பர் செல்’ எம்எல்ஏக்கள் என்று கூறுவது போல், டெல்லியிலும் ‘ஸ்லீப்பர் செல்’ எம்பிக்கள் உள்ளனர் என்பது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

 இந்த குளறுபடி வேலையை ெசய்தவர்கள் யார் யார் என்பது, கட்சியின் தலைமைக்கு தெரிந்தும், அவர்கள் வெளியே சொல்லாமல் கமுக்கமாக உள்ளனர். கட்சியின் முடிவுக்கு எதிராக 4 எம்பிக்கள் செயல்பட்டதால், அவர்களில் யார் மீது நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர். அதிமுக ஆட்சி தமிழகத்தில் பெரும் குழப்பத்துக்கு இடையே நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்று வந்தால், ஆட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணன் விசாரிக்கிறார். வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்பதால், அதிமுகவின் ‘ஸ்லீப்பர் செல்’ எம்எல்ஏக்கள் யார் யார் என்பதும் தெரியவரும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

புறக்கணிப்பு எம்பிக்கள்: மக்களவையில் மொத்தம் 544 உறுப்பினர்கள் இடங்கள் இருந்தும், தற்போது 10 இடங்கள் காலியாக உள்ளது. மீதமுள்ள 534 உறுப்பினர்கள் மட்டும் சிட்டிங்கில் உள்ளனர். இதில், பாஜவுக்கு ஆதரவாக அதிமுக உட்பட 331 வாக்குகள் கிடைக்க வேண்டும். ஆனால், அதிமுகவின் 4 எம்பிக்கள், பாஜவின் 2 எம்பிக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்கு அளிக்கவில்லை. பாஜ எம்பிக்களில் விர்தல் ராட்டியா உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், பாஜ எம்பி கீர்த்தி ஆசாத் வெளிநாடு சென்றதால் வாக்களிக்கவில்லை. அதனால், பாஜவுக்கு 325 வாக்குகள் கிடைத்தன. காங்கிரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், மத்திய பிரதேச எம்பி கமல்நாத், அருணாசலப்பிரதேச எம்பி நிநாங் இரிங் ஆகியோர் வாக்களிக்க வரவில்லை. அதனால், 126 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா, வாக்கெடுப்பை புறக்கணித்தது. தெலுங்கு தேசம் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. அதனால், சிவசேனாவின் 18 எம்பிக்கள், பிஜூ ஜனதா தளத்தின் 19 எம்பிக்கள், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் 11 எம்பிக்கள், அதிமுகவின் 4 எம்பிக்கள், பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலா 2 எம்பிக்கள் ஆகியோர் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: