தவறி விழுந்து இறந்ததாக கையெழுத்து பெற முயற்சி குண்டு பாய்ந்து இறந்தவர்கள் பெற்றோரை மிரட்டும் போலீஸ்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் குண்டு பாய்ந்து இறந்தவர்களின் பெற்றோரை தவறி விழுந்து இறந்ததாக கூறி கையெழுத்து போடக்கூறி போலீசார் மிரட்டி வருகின்றனர். இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி புஷ்பா நகர் 1வது தெருவைச் சேர்ந்த பாஸ்கர் மகன் ரஞ்சித்குமார்(22). இவர் கடந்த 22ம் தேதி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தலையின் பின்புறம் குண்டு பாய்ந்து பலியானார். ரஞ்சித்குமார், நாசரேத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் டிப்ளமோ படித்துள்ளார். குத்துச்சண்டை வீரரான இவர், மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விருதுகளை பெற்றுள்ளார்.

22ம்தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை செல்போனில் படம் பிடிக்கும் ஆர்வத்தில் போனார்.  அப்போது போலீசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததும் பாளையங்கோட்டை ரோட்டில் ஓடி வந்த அவரின் தலையின் பின்புறம் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் இறந்தார். இவரது தாய் முத்துலட்சுமி. தங்கை பானுப்பிரியா தூத்துக்குடியில் ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். நேற்று காலை ரஞ்சித்குமார் வீட்டுக்கு சிப்காட் இன்ஸ்பெக்டர் ஹரிகரன், தாசில்தார் பரமசிவம் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். ரஞ்சித்குமாரின் குடும்பத்தினரிடம் ஒரு படிவத்தை கொடுத்து கையெழுத்து போடும்படி வலியுறுத்தினர்.

அதில், ‘‘கடந்த 22ம்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தில் ரஞ்சித்குமார் கலந்து கொண்டபோது அவர் தவறி கீழே விழுந்து காயம்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இறந்ததாகவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுப்பது போல் அக்கடிதத்தின் வாசகங்கள் இருந்தன. அவர் போலீஸ் தடியடி, துப்பாக்கிசூட்டில் இறந்ததாக அதில் குறிப்பிடப்படவில்லை. இதனால் அந்த படிவத்தில் கையெழுத்திட ரஞ்சித்குமாரின் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். ரஞ்சித்குமாரின் சித்தப்பா ஆறுமுகம் கூறியதாவது: எனது அண்ணன் மகன் ரஞ்சித்குமார், போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் தலையின் பின்புறம் குண்டுபாய்ந்து பலியாகியுள்ளான்.

ஆனால் போலீசார் அதை காட்டாமல் கீழே விழுந்து இறந்ததாக எழுதி எங்களிடம் கையெழுத்து வாங்க வந்தனர். நாங்கள் மறுத்துவிட்டோம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகிறோம் என முதல்வர் எழுத்துப் பூர்வமாக ஆணை வெளியிட வேண்டும். தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்றும் நோக்கத்தோடு இடமாற்றத்தோடு விட்டு விடக்கூடாது. வன்முறைக்கு காரணமான முன்னாள் கலெக்டர், எஸ்.பி. மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய அனைவர் மீதும் கொலை வழக்குப்பதிய வேண்டும். அப்போது தான் ரஞ்சித்குமாரின் உடலை வாங்குவோம் என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: