வேலூரில் நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம்: தனியார் டிவி கேமராமேன் கஞ்சா கும்பலால் படுகொலை

வேலூர்:  வேலூரில் கஞ்சா கும்பல் சேர்ந்தவர்கள், நள்ளிரவு வீடு புகுந்து தனியார் தொலைக்காட்சி கேமராமேனை படுகொலை செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் எஸ்.எஸ்.கே.மானியம் தெருவை சேர்ந்தவர் அசோக்(35). தனியார் தொலைக்காட்சியில் கேமராமேனாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 12.30 மணியளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அசோக் எழுந்து சென்று கதவை திறந்தார். அப்போது திடீரென 3 பேர் வீட்டிற்குள் புகுந்து அசோக்கை கத்தியால் குத்தினர். இதில் அசோக் மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்த வேலூர் தெற்கு போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த அசோக்கை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அசோக் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் எஸ்.எஸ்.கே. மானியம் தெருவைச் சேர்ந்த திருமலை(35) மற்றும் ரமேஷ்(எ) ரெட்டை(18) ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைதாகி உள்ள வாலிபர் திருமலை கொலை வழக்கு ஒன்றில், நேற்று முன்தினம் ஜாமீனில் வந்துள்ளார். இவர் சிறையில் இருந்து கொண்டே தனக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் சைதாப்பேட்டை, எஸ்.எஸ்.கே. மானியம் பகுதிகளில் கஞ்சா விற்று வந்துள்ளார். கஞ்சா விற்பனை குறித்து போலீசாருக்கு அசோக் தகவல் தெரிவிப்பதாகவும் இதனால் கஞ்சா விற்பனை செய்ய முடியவில்லை என்றும் திருமலையிடம் நண்பர்கள் கூறி உள்ளனர். இதைகேட்டு ஆத்திரம் அடைந்த திருமலை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: