ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜர் ஜெயலலிதாவை பார்க்க விடாமல் தடுத்தனர் பள்ளி தோழி பதர் சையத் கண்ணீர் பேட்டி

சென்னை :  அப்போலோவில் ஜெயலலிதாவை பார்க்க விடாமல் என்னை தடுத்தனர் என்று பள்ளி தோழியும் முன்னாள் எம்எல்ஏவான பதர் சையத் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் கண்ணீர் மல்க கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக விசாரணை நடந்து வருகிறது.  இந்நிலையில், 2011ம் ஆண்டு சசிகலா வெளியேற்றப்பட்ட போது உளவுத்துறை டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல்,  ஜெயலலிதாவின் பள்ளி தோழியும் முன்னாள் எம்எல்ஏவுமான பதர் சையத் ஆகியோரிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்து சம்மன் அனுப்பியது. அதன்படி ஐஜி பொன்.மாணிக்கவேல், ஜெயலலிதாவின் பள்ளி தோழி பதர் சையத் ஆகியோர் நேற்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.

இருவரிடமும் தனித்தனியாக நீதிபதி விசாரணை நடத்தினர். அப்போது ஐஜி பொன்.மாணிக்கவேலிடம்  நீதிபதி ஆறுமுகசாமி நடத்திய விசாரணையில், ‘‘நீங்கள் உளவுத்துறை டிஐஜியாக இருந்தபோதுதான் ஜெயலலிதாவை சசிகலா உறவினர்கள் கொலை செய்ய சதிதிட்டம் தீட்டினார்களா, சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் இருந்து எதற்காக வெளியேற்றப்பட்டனர், இது தொடர்பாக ஜெயலலிதா உங்களிடம் ஏதாவது கேட்டாரா, சதிதிட்டம் தீட்டியது உண்மையா?’’  என்றெல்லாம் சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ஐஜி எனக்கு எதுவும் தெரியாது என்று மட்டுமே பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று, ஜெயலலிதாவின் தோழி பதர் சையத்திடம் நீதிபதி, நீங்கள் கடைசியாக எப்போது பார்த்தீர்கள், நீங்கள் பார்க்கும் போது அவரின் உடல்நிலை எப்படி இருந்தது,  உங்களிடம் வேறு ஏதேனும் கூறினாரா, சசிகலா குடும்பத்தை பற்றி ஏதாவது கூறினாரா, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது சென்று பார்த்தீர்களா, பார்க்க சென்ற போது யார் உங்களை தடுத்தது என்று ஜெயலலிதா குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அதற்கு பதர் சையத், பள்ளி தோழி என்பதால்  ஜெயலலிதா என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு அரசியலில் பல்வேறு பதவிகள் கொடுத்தார். அவரை நான் கடைசியாக 2011ம் ஆண்டுதான் பார்த்தேன், அதன்பிறகு என்னால் அவரை நெருங்க கூட முடியவில்லை. மருத்துவமனையில் இருந்த போது அவரை பார்க்க அனுமதிக்கவில்லை ஜெயலலிதாவின் அறையை கையெடுத்து வணங்கி, பிரார்த்தனை செய்து விட்டு வருத்தத்தோடு வந்ததாக கூறியுள்ளார். பின்னர்  வெளியில் வந்த பதர் சையத் கண்ணீர் விட தொடங்கினார். அவரே இல்லை, இனி அவர் குறித்து நான் என்ன சொல்ல முடியும் என்று கூறி கண்ணீர் விட்டு சென்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: