தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : CBI விசாரணை கோரியதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது குறித்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் CBI விசாரணை கோரி ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் அவசர வழக்காக இதனை விசாரிக்க முடியாது என்றும், எனவே வரும் 28-ம் தேதி மீண்டும் முறையிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. மிக அவசரம் என்றால் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக கடந்த செவ்வாயன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாக சென்றனர். 144 தடை உத்தரவை மீறியதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயன்றனர். எனினும் கூட்டம் கலையாததால் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது.

இதற்கும் கட்டுப்படாத கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறியது. அப்போது அங்கிருந்த போலீஸாருக்கும் - பொதுமக்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இறுதியில் கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த திணறிய போலீஸார் யாரும் எதிர்பாராதவிதமாக மக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் சுமார் 13 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர். காவல்துறையினர் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து CBI விசாரிக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி என்பவர் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு சாதாரண சம்பவம் என்று கருதமுடியாது. மிகவும் தீவிரத்தன்மை கொண்ட அரிதிலும் அரிதான கொடுமையான சம்பவம் என கூறப்பட்டுள்ளது. மேலும் கொலை தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களும், சம்பவம் நடந்த அன்று பொறுப்பில் இருந்த கலெக்டரும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். எனவே தங்கள் துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு காவல்துறையால் நேர்மையான, சுதந்திரமான விசாரணையை நடத்த முடியாது. சுதந்திரமான விசாரணை என்பது அரசியல் சட்டத்தில் குடிமக்களுக்கு உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமையாகும். எனவே உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு தூத்துக்குடி தாக்குதல் சம்பவம் குறித்து CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்,

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: