பணி நிரந்தரம் செய்யக் கோரி வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளர்கள் உண்ணாவிரதம்: குடும்பத்தினருடன் பங்கேற்பு

சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல்மின் நிலையத்தில் முதலாவது நிலையில் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இதில், வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கையை அனல்மின் நிலைய நிர்வாகம் இதுவரை நிறைவேற்றவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில், 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று காலை அனல்மின்நிலையம் எதிரே சாலையில் பந்தல் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தங்களது குடும்பத்தினருடன் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.  

போராட்டத்தில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு 600 வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர். போராட்டத்தின்போது அவ்வழியாக வந்த கனரக வாகனங்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து சாலையில்  தடை ஏற்படுத்தினர்.

இதனால், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு  செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற  நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஜூன் மாதம் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதுடன், அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: