சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமன விவகாரம்: மத்திய அரசிடம் விரிவான விளக்கம் கேட்க கொலிஜியம் முடிவு

புதுடெல்லி: உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க மத்திய அரசு மறுத்துள்ளது. இது தொடர்பாக விரிவான விளக்கம் கேட்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் முடிவு செய்துள்ளது. உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்பை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனை மத்திய அரசு நிராகரித்து விட்டது. ஜோசப்பை விட சீனியர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது மத்திய அரசின் வாதம். ஆனால் உத்தரகாண்ட்டில் குடியரசு தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியபோது அதனை செல்லாது என அறிவித்தவர் ேஜாசப்.

இதன் காரணமாகவே அவருக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்நிலையில் நேற்று மாலை 4.15 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூத்த நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு கூடி 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையின் முடிவில் உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்த மறுப்பதற்கான விரிவான விளக்கத்தை கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதவும், தெலங்கானா, ஆந்திரா, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரை செய்தும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

கொலிஜியம் அடுத்து எப்போது கூடும் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை கொலிஜியம் தனது முடிவை மாற்றாமல், ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு அளிக்க மீண்டும் பரிந்துரை செய்து அனுப்பினால், அந்த முடிவுக்கு மத்திய அரசு பணிந்துதான் போக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: