2 ஏக்கரில் மலை போல குவிந்த குப்பை பிரித்தெடுக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு-ஆடுதுறை பேரூராட்சி அதிகாரி தகவல்

திருவிடைமருதூர் : திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை பேரூராட்சியில் சேகரமாகும் குப்பைகளை மலைபோல் குவித்து வைத்திருப்பதால் தூய்மை பாரத் இயக்கத்தில் ரூ.40 லட்சத்தில் பிரித்தெடுக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஆடுதுறை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வணிக ரீதியான பயன்பாடுகளால் தினமும் 4 டன் குப்பைகள் சேகரமாகிறது. இவற்றை தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரித்து நமச்சிவாயபுரத்தில் சுமார் 2 ஏக்கரில் உள்ள பேரூராட்சியின் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.இவ்வாறாக பல ஆண்டுகளாக கொட்டப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் மலைபோல குவிந்துள்ளன. இவற்றை சில நேரம் கொளுத்திவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் அவ்வழியே வாகனங்களில் பயணிப்போர் துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் சுற்றுப்புற சுகாதாரம் பாதிப்பதுடன், ஈ மற்றும் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகிறது. மழை மற்றும் காற்று வீசும் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் துர்நாற்றம் அதிகமாவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உடனுக்குடன் மறுசுழற்சிக்கு அனுப்ப வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் (கூ.பொ) சிவலிங்கத்திடம் கேட்டபோது, ஒன்றிய, மாநில அரசுகளின் தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் உயிர் அகழ்வு (பயோ மைனிங்) தொழில்நுட்பத்தில குப்பைகளை வகைப்படுத்தி பிரித்தெடுக்கவும், தொழிற்சாலைகளுக்கு மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.5 ஆயிரத்து 500 கியூபிக் மீட்டர் பரப்பளவில் இயந்திரம் மூலம் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்கென ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணியில் பிளாஸ்டிக், ரப்பர், கண்ணாடி மற்றும் மக்கும் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்ப உள்ளனர். இப்பணிகள் தொடங்கப்பட்டதில் இருந்து ஓரிரு மாதங்களில் முடிக்கப்பட்டுவிடும். அதன் பிறகு குப்பைகள் இங்கு சேகரமாகாது. அவ்வப்போது பிரித்தெடுத்து தொடர்ந்து உயிரி அகழ்வு பணிகள் செய்யப்படும் என்றார்….

The post 2 ஏக்கரில் மலை போல குவிந்த குப்பை பிரித்தெடுக்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு-ஆடுதுறை பேரூராட்சி அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: