கொச்சி: மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ என்ற அமைப்பில், சமீபகாலமாக பல்வேறு பிரச்னைகள் பூதாகரமாக வெடித்து பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. சங்கத்தின் இணை செயலாளர் பதவியை நடிகை அன்சிபா ஹசன் (34) ராஜினாமா செய்தார். சங்கத்தின் செயற்பாடுகள் முறையாக இல்லை என்றும், சில உறுப்பினர்கள் இந்த அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் பகிரங்க குற்றம் சாட்டியிருந்தார். நடிகர் டினி டோம் தன்மீது அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகவும் அவர் புகார் அளித்தார்.
இதற்கு போட்டியாக நடிகை லட்சுமி பிரியா, அன்சிபா ஹசன் மீது ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி மானநஷ்ட வழக்கு தொடர்வதாக தெரிவித்ததால் மோதல் முற்றியது. இந்நிலையில் லட்சுமி பிரியா, திருப்புனித்துரா மகளிர் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரேஷ்மா ஆகியோருக்கு எதிராக, திருப்புனித்துரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அன்சிபா ஹசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ‘நான் ஏற்கனவே அளித்த புகார் குறித்து போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அரசியல் செல்வாக்கு மற்றும் தலையீடு காரணமாகவே போலீசார் எனது புகாரை நிராகரித்து நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நடிகையின் புகார் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்கிறது. இந்நிலையில், இந்த சட்டப் போராட்டம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
