குரு பூர்ணிமா (வியாச பூர்ணிமா)

ஆனி மாத அமாவாசைக்கும் ஆடி மாத அமாவாசைக்கும் இடைப்பட்ட காலத்துக்கு ஆஷாட மாதம் என்று பெயர். அந்த ஆஷாட மாதப் பௌர்ணமி நாளில் குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது. ‘கு’ என்றால் அறியாமை, ‘ரு’ என்றால் போக்குபவர். அறியாமை எனும் இருளைப் போக்கி, ஞான ஒளி தரும் ‘குரு’-வைப் போற்றுவதற்காகக் கொண்டாடப்படும் பாரம்பரிய ஆசிரியர் தினம் தான் இந்த குரு பூர்ணிமா. பராசர முனிவருக்கும் சத்தியவதிக்கும் மகனாக வேத வியாசர் அவதரித்த நாள் ஆஷாட மாதப் பௌர்ணமியாகும். வியாசர் அவதரித்த நாள் என்பதால் வியாச பூர்ணிமா என்ற பெயரும் இந்நாளுக்கு உண்டு.“அசதுர்வதனோ ப்ரஹ்மா த்விபாஹுரபரோ ஹரி:அபால லோசன: சம்பு: பகவான் பாதராயண:”நான்கு முகமில்லாத பிரம்மா, இரண்டே கைகள் கொண்ட நாராயணன், நெற்றிக்கண் இல்லாத சிவபெருமான் என்று வியாசர் கொண்டாடப்படுகிறார். இத்தகைய வேத வியாசர் நமக்குச் செய்த உபகாரங்கள் பற்பல:* ஒன்றாக இருந்த வேதத்தை ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம், அதர்வண வேதம் என நான்காகப் பிரித்தார்.*ஐந்தாவது வேதமான மகாபாரதத்தை இயற்றினார்.*பகவத் கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம் இவற்றைத் தொகுத்தார்.*பதினெட்டு புராணங்களை நமக்கு வழங்கினார்.* 545 பிரம்ம சூத்திரங்களைத் தந்து (ராமாநுஜர் உரையின் படி எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது), உபநிஷத்துகளின் பொருளைத் தெளிவுபடுத்தினார்.இத்தனைப் பேருதவிகள் செய்த வியாசருக்கு நாம் என்ன கைம்மாறு செய்தாலும் ஈடாகாதென்றாலும், நமது நன்றியை அவருக்குத் தெரிவிக்கும் விதமாக அவர் அவதரித்த நாளான ஆஷாட மாதப் பௌர்ணமி நாளை வியாச பூர்ணிமா என்றும் குரு பூர்ணிமா என்றும் கொண்டாடி, அவரையும் அவரது உபதேசங்களையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் நமது குருமார்களையும் நாம் வணங்குகிறோம். வியாசர் பிரம்ம சூத்திரங்களை எழுதத் தொடங்கிய நாளும் இதே ஆஷாடப் பௌர்ணமியே ஆகும்.இந்நாளில் உலகுக்கெல்லாம் குருவாய் விளங்கும் இறைவனின் வடிவங்களான தட்சிணாமூர்த்தி, ஹயக்ரீவர், கீதாசார்யனான கிருஷ்ணன், பிரம்ம சூத்திரங் களை அருளிய வேத வியாசர், அந்த சூத்திரங்களுக்கு உரை எழுதிய ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் ஆகியோரை அவரவர் குல வழக்கத்துக்கு ஏற்றபடி மலர்தூவி வணங்குவார்கள். அத்துடன் தத்தம் ஆன்மிக குருமார்களுக்கும் பெற்றோர்களுக்கும் சீடர்கள் இந்நாளில் பாத பூஜை செய்து குருவருளுக்குப் பாத்திரமாவார்கள்.“குருர்ப்ரஹ்மா குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேச்வர:குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை குரவே நம:” – என்ற ஸ்லோகத்தைச் சொல்லி குருவை வணங்குவார்கள்.பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இந்த நாளில் தங்களது ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் வணங்கி, அவர்களுக்கு காணிக்கைகளை வழங்கி, அவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். சந்நியாசிகள் இந்நாளில் ‘வியாச பூஜை’ செய்து, தங்கள் சாதுர்மாஸ்ய (நான்கு மாத) விரதத்தைத் தொடங்குவார்கள். சாதுர்மாஸ்யம் என்னும் இந்த நான்கு மாதங்களிலும் சந்நியாசிகள் வேறு எங்கும் சஞ்சரிக்காமல், ஒரே இடத்தில் தங்கியிருந்து சீடர்களுக்கு உபதேசங்கள் செய்வார்கள்.திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்…

The post குரு பூர்ணிமா (வியாச பூர்ணிமா) appeared first on Dinakaran.

Related Stories: