மார்க்கக் கடமைகளில் விண்ணில் வைத்துக் கடமையாகப்பட்ட வழிபாடுதான் தொழுகை. முதலில் ஐம்பது நேரத் தொழுகை தொழ வேண்டும் என்கிற கட்டளை பிறந்தது. பிறகு அது ஐந்து நேரத் தொழுகையாகக் குறைக்கப்பட்டது.வானவர் தலைவர் ஜிப்ரீலுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விண்ணேற்றப் பயணம் (மிஃராஜ்) மேற்கொண்ட போது வானுலகில் முந்தைய இறைத்தூதர்கள் பலரையும் சந்தித்தார்.சொர்க்கம், நரகம் உட்பட வானுலகக் காட்சிகளை எல்லாம் பார்த்து விட்டுத் திரும்பிவரும்போது வானத்தில் இறைத்தூதர் மூஸா, நபிகளாரை நோக்கி, “இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவினார்.“என் சமுதாயத்திற்கு இறைவன் ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கியுள்ளான்” என்று நபிகளார் கூறினார்.“உங்கள் சமுதாயத்தாரால் ஐம்பது நேரத் தொழுகையை நிறைவேற்ற முடியாது. மிகுந்த சிரமம் ஆகிவிடும். இறைவனிடம் திரும்பச் சென்று அதைக் குறைக்கும்படி வேண்டுங்கள்” என்று ஆலோசனை சொன்னார்.நபிகளார் இறைவனிடம் சென்று முறையிட, அவன் பத்து நேரத் தொழுகையைக் குறைத்து நாற்பது ஆக்கினான்.இறைத்தூதர் மூஸா மீண்டும் நபிகளாரிடம், “நாற்பது நேரத் தொழுகையும் அதிகம்தான். உங்கள் சமுதாயத்தினரால் நிறைவேற்ற முடியாது. குறைக்கும்படி இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார்.நபிகளார் மீண்டும் இறைவனிடம் சென்று முறையிட்டார். இப்படியே, இறைவன் பத்துப் பத்தாகக் குறைத்து, ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். இதை அறிந்த மூஸா, நபிகளாரிடம், “ஐந்து நேரத் தொழுகையும் அதிகம்தான். இன்னும் குறைக்கும்படி வேண்டுங்கள்” என்றார்.“இல்லை. ஐந்து நேரத் தொழுகையையும் குறைக்கும் படி இறைவனிடம் மீண்டும் கோரிக்கை வைக்க எனக்குக் கூச்சமாக இருக்கிறது. ஐந்து நேரத் தொழுகையை யார் உரிய நேரத்தில், உள்ளச்சத்துடன் நிறைவேற்றுகிறாரோ அவருக்கு ஐம்பது நேரத் தொழுகையை நிறைவேற்றிய புண்ணியத்தை, நன்மையை அருள்வேன் என்று இறைவன் கூறியுள்ளான்” என்றார் நபிகளார்.நபிகளாரின் விண்ணேற்றத்தின் போதுதான் ஐம்பது நேரத் தொழுகை ஐந்து நேரத் தொழுகையாகக் குறைக்கப்பட்டது. மற்ற வழிபாடுகள் எல்லாம் மண்ணில் கடமையாக்கப்பட்டபோது, தொழுகை மட்டும் விண்ணில் கடமையாக்கப்பட்டது.அதனால்தான் “தொழுகை இறைநம்பிக்கையாளர்களின் விண்ணேற்றம் ஆகும்” என்று சிறப்பிக்கப்படுகிறது.- சிராஜுல்ஹஸன்…
The post ஐம்பது, ஐந்தானது! appeared first on Dinakaran.