சென்னை: படப்பிடிப்புக்காக விமானத்தில் எகானமி வகுப்பில் பயணம் செய்திருக்கிறார் கமல்ஹாசன். வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகும் ‘கல்கி 2’ படத்தில் அமிதாப் பச்சன், பிரபாசுடன் இணைந்து கமல்ஹாசன் நடிக்கிறார். இதற்கிடையே சமீபத்தில் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ‘கேஸ், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக நடிகர்கள், நடிகைகள் தங்களது தேவைகளை குறைத்துக்கொள்ள வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு சிரமத்தை தரக்கூடாது’ என கேட்டுக்கொண்டார். இந்நிலையில் மற்றவர்களுக்கு சொன்ன அறிவுரையின்படி தானும் நடந்து காட்டத் தொடங்கியிருக்கிறார் கமல்ஹாசன்.
‘கல்கி 2’ படத்தின் படப்பிடிப்புக்காக கமல்ஹாசன் ஐதராபாத்துக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது. வழக்கமாக பிரைவேட் ெஜட்டில் செல்லும் கமல்ஹாசன், இந்த முறை பயணிகள் விமானத்தில் தனக்கு டிக்கெட் புக் செய்யும்படி சொன்னது மட்டுமின்றி, பிசினஸ் கிளாஸ் கூட வேண்டாம் என கறாராக சொல்லியிருக்கிறார். எகானமி வகுப்பில் செல்வதாக சொல்லியிருக்கிறார். இதையடுத்து தயாரிப்பு தரப்பு அவர் கேட்டபடி எகானமி வகுப்பில் டிக்கெட் தந்துள்ளது. கமல்ஹாசனின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

