இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர், பிரியதர்ஷன். பல்வேறு மொழிகளில் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வரும் அவர், தற்போது இந்தியில் ‘பூத் பங்களா’ என்ற படத்தை தனது 99வது படமாக எழுதி இயக்கியுள்ளார். விரைவில் அவர் இயக்கும் 100வது படத்தில், அவரது முதல் படத்தின் ஹீரோ மோகன்லால் நடிப்பது குறிப்பிடத்தக்கது. நடிகை லிசியை கடந்த 1990ல் காதல் திருமணம் செய்த பிரியதர்ஷன், கல்யாணி என்ற மகளுக்கும், சித்தார்த் என்ற மகனுக்கும் தந்தையானார். இந்நிலையில், கடந்த 2016ல் அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து மூலம் பிரிந்தனர். ஆனால், இப்போது மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து பதிலளித்த பிரியதர்ஷன், ‘எங்கள் திருமணத்துக்கு இந்து, கிறிஸ்தவ மதம் தடையாக இருந்தது. எனது குடும்பத்தினர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. பிறகு ஏற்றுக்கொண்டனர். நாங்கள் 32 வருடங்கள் இணைந்து வாழ்ந்துள்ளோம். அதில் ஒருவிதமான சலிப்பும், ஈகோவும் ஏற்பட்டது. என்னால் நீயா, உன்னால் நானா என்ற ரீதியிலான ஈகோ, பிறகு கசப்பான உறவாக மாறியது. இதனால், உடனே நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தோம். சில வருடங்கள் கடந்த பிறகுதான் ஒருவரை ஒருவர் மிஸ் செய்வதை உணர்ந்தோம். எனவே, தற்போது மீண்டும் இணைந்துள்ளோம்.
இதன்மூலம் ஒரு உண்மையான அன்பு எங்களுக்கு இடையே மறைந்திருந்தது என்று சொல்லலாம். நான் அவரை மிஸ் செய்தேன், அவரும் என்னை மிஸ் செய்தார். வாழ்க்கையில் கண்டிப்பாக ஒரு துணை தேவை. பிரிந்திருந்த காலத்தில் நாங்கள் வேறு திருமணத்தை நோக்கி செல்லவில்லை. அடுத்து வரும் நபர் இன்னும் மோசமானவராக இருந்தால் என்ன செய்வது என்ற எண்ணம்தான் இதற்கு காரணம். அதை நாங்கள் மீண்டும் சந்தித்தபோதுதான் உணர்ந்தோம். இனிமேல் நானும், லிசியும் பிரிய மாட்டோம்’ என்றார்.
