×

தாய் கிழவி – திரைவிமர்சனம்

 

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, முனிஷ்காந்த், பால சரவணன், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்‘ தாய் கிழவி‘.

உசிலம்பட்டி கருமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி பவுனுத்தாயி(ராதிகா).கிராம மக்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து அதைக் கறாராக வாங்கும் கெத்தான பெண். அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். மூவரையும் விரட்டி விட்டு ஒற்றை ஆளாக ஒரு பெரிய வீட்டில் தன் வாழ்க்கையை தனக்காக வாழ்கிறார் உடன் கேட்ட பவுன் சீர் கொடுக்காதக் காரணத்தால் கணவனால் விட்டுச் செல்லப்பட்ட மகள், அவரின் மகன்.

ஊருக்குள் யாரையும் விட்டு வைக்காமல் விரட்டி , அடித்து வட்டி வாங்கும் முரட்டு மூதாட்டி, தீடீரென ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் விழுகிறார். ஏற்கனவே சொத்துக்காகக் காத்திருக்கும் மகன்கள், மீதி பவுனுக்காகக் காத்திருக்கும் மகளின் கணவன் உடன் வட்டிக்குப் பணம் வாங்கிவிட்டு இருக்கும் ஊர்மக்கள் பலர் என சுற்றி உட்கார அடுத்து என்ன என்பது மீதிக்கதை.

ராதிகா சரத்குமார்… என்னம்மா நடிப்பு! சண்டை போடும்போது கூட கண்ணில் ஈரம் தெரியும். காமெடி பேசும்போது கூட கண்ணுக்குள் ஒரு வலி இருக்கும். அந்த இரண்டையும் கலக்கி கொடுத்திருக்கிறார். “ஆத்தாடி… இந்தம்மா மாதிரி நடிக்க இன்னொரு ஆளு பிறந்துதான் வரணும்!” என்று சொல்ல வைக்கும் சீன்கள் இருக்கு.
குடும்ப சண்டைகள், மருமகள்–மாமியார் சலசலப்புகள், காமெடி கலாட்டாக்கள், வெள்ளந்தியான ஜனங்கள், என படத்தை அவ்வளவு எதார்த்தமாக காட்சிபடுத்தியிருக்கிறார் இயக்குனர் சிவகுமார் முருகேசன்.

படத்தின் மிகப்பெரும் பலம் ராதிகாவின் மேக்கப் மற்றும் உடல்மொழிதான். அச்சு அசல் தென் தமிழக தண்டட்டிப் பாட்டிகளை கண் முன் நிறுத்தியிருக்கிறார்.
விவேக் விஜயகுமார் சினிமோட்டோகிராபி நம்மை உசிலம்பட்டி, கருமாத்தூர் கிராமங்களுக்குக் கடத்திச் செல்கிறது. அதற்கேற்ப நையாண்டி ரக பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு இன்னொரு பலம். எடிட்டர் சான் லோகேஷ் சிரித்துக்கொண்டே கொண்டாட்டமாக எடிட் செய்திருப்பார் போல, கமல் ஹாசன் பாடல்கள், பழைய பாடல்கள் வரும் இடமெங்கும் எடிட்டிங் தெறிக்கிறது.

உண்மையான பெண் சுதந்திரம் எது, என்பதை தேவையில்லாத ஒப்பீடுகள் இல்லாமல், கலகல காமெடியுடன் கலந்து சொன்ன விதம் அருமை. வீட்டில் உயிருக்குப் போராடும் முதியவர்கள் இருந்தால் அவர்களுக்கு பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறது இப்படம்.ஒருசில ரிப்பீட் மருத்துவமனை காட்சிகள், கெட்ட வார்த்தைகள் பயன்பாட்டைத் தவிர்த்திருக்கலாம். ஆனாலும் ஒரு சில மோசமான வார்த்தைகளை குடும்பங்களுக்காக மாற்றமும் செய்திருக்கிறது படக்குழு.

மொத்தத்தில் ‘தாய் கிழவி’ , பெண்களுக்கு சேமிப்பும் , சுயமரியாதையும், சொந்தக் காலில் நிற்பதும்தான் உண்மையான பெண் சுதந்திரம் என வகுப்பெடுத்து தாய்மார்களின் கண்களை நனைத்திருக்கிறது. மகளிர் தினத்தைக் கொண்டாட மிகச் சரியான படமாக மாறியிருக்கிறது ‘‘தாய் கிழவி

Tags : Chennai ,Sivakarthikeyan ,Sivakumar Murugesan ,Radhika Sarathkumar ,Singampuli ,Munishkanth ,Bala Saravanan ,Rachel Rebecca ,Paunuthai ,Radhika ,Karumathur ,Usilampatti ,
× RELATED வெற்றி நடிக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !!