திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை காவல்நிலையத்தில் நேர்மையான சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் சமுத்திரக்கனி. தமிழ்நாடு, ஆந்திரா எல்லை பகுதியில் தொடர் கொலைகள் ஒரே பாணியில் நடந்து பொதுமக்களை அதிர வைக்கிறது. கொலையாளிகளை சமுத்திரக்கனியும், இன்ஸ்பெக்டர் ஷிவதா நாயரும் கண்டுபிடிக்கும் நேரத்தில், அரசியல்வாதிகளின் ஆட்டம் தொடங்குகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
கடந்த 1995 முதல் 1999கள் வரை தமிழ்நாடு, ஆந்திரா எல்லை பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை நவீன்குமார் பழனிவேல் எழுதி இயக்கியுள்ளார். போலீஸ் கெத்து காட்டி, அதிகமாக பேசாமல், செயல்களின் மூலம் வேகமாக துப்பறிவதும், புதிய பாடிலாங்குவேஜ் மூலம் கேரக்டரை நிமிர வைப்பதும் சமுத்திரக்கனியை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கின்றன. ஷிவதா நாயருக்கு காக்கி உடை பொருத்தமாக இருக்கிறது.
ஆந்திர காவல்துறை டிஎஸ்பி சுந்தரபாண்டியன், தமிழ்நாடு காவல்துறை டிஎஸ்பி மூணாறு ரமேஷ் ஆகியோர் மீது ரசிகர்களுக்கு கோபம் வரும் அளவுக்கு கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். கொலையாளிகளாக வரும் ராஜ் திரந்தஸு, பிரேம் ஆகியோர் பார்வையாலேயே மிரட்டியுள்ளனர். போலீஸ் டிரைவர் புலிப்பாண்டி கவனிக்க வைத்துள்ளார். சொல்ல வந்ததை நேர்த்தியாக சொன்ன இயக்குனர் நவீன்குமார் பழனிவேல், நாடகத்தனத்தை தவிர்த்திருக்க வேண்டும். கே.கே மற்றும் மோகன்குமார் பழனிவேல் ஒளிப்பதிவும், விபின் பாஸ்கர் பின்னணி இசையும் வெப்தொடருக்கான பாணியிலேயே இருக்கின்றன. இத்தொடர் நாளை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
