தமிழ் படவுலகில் பல்வேறு சாதனைகள் படைத்து வரும் ரஜினிகாந்தின் வாழ்க்கை சம்பவங்கள் குறித்து பல்ேவறு புத்தகங்கள் வெளியாகியுள்ளன. இது ஒவ்வொன்றும் அந்தந்த எழுத்தாளரின் பார்வையில் உருவானவை என்றும், அந்த புத்தகங்களில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துகள் தன்னுடையது அல்ல என்றும், பலமுறை ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார். இந்நிலையில், தனது வாழ்க்கை சம்பவங்களை மையமாக வைத்து ரஜினிகாந்த் சுயசரிதை எழுத முயற்சித்து, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது தடைப்பட்டு வந்தது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனை வைத்து தனது சுயசரிதையை எழுத தொடங்கிய ரஜினிகாந்த், பிறகு திடீரென்று அதை நிறுத்திவிட்டார். அதற்கான காரணத்தை ரஜினிகாந்த் சொல்லும்போது, ‘சுயசரிதை என்பதால் பல உண்மைகளை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்.
அது சம்பந்தப்பட்டவர்களின் மனதை பாதிக்கும் என்பதால், சுயசரிதையை மேற்கொண்டு தொடர விரும்பவில்லை’ என்றார். இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் மீண்டும் தனது சுயசரிதையை எழுதும் பணியை தொடங்கியுள்ளதாக அவரது மகளும், இயக்குனரும், தயாரிப்பாளருமான சவுந்தர்யா சொல்லியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எனது தந்தையின் 50 வருட திரையுலக பயணம் என்பது ஒரு சாதாரண சாதனை கிடையாது. அவருக்கு மிகப்பெரிய விழா நடத்த வேண்டும் என்பது என் ஆசை. தற்போது அவர் சுயசரிதை எழுதிவருகிறார். அவரது வாழ்க்கை வரலாறு கண்டிப்பாக குளோபல் சென்சேஷன் ஆகும்’ என்றார்.
