வெற்றிபெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘வித் லவ்’. அனஸ்வரா ராஜன் ஹீரோயினாக நடிக்க, மதன் இயக்கியுள்ளார். வரும் பிப்ரவரி 6ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து அபிஷன் ஜீவிந்த் கூறுகையில், ‘என்னுடன் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் பணியாற்றியவர் இக்கதையை சொன்னார். ஒரு ரசிகனாக எனக்கு அதிக திருப்தி ஏற்பட்டதால் உடனே நடிக்க சம்மதித்தேன். நான் நடித்தே ஆக வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடவில்லை. அப்போதுதான் சவுந்தர்யா ரஜினிகாந்த் எனக்குள் நடிக்கும் எண்ணத்தை விதைத்தார். என்னை சுற்றியிருந்த அனைவரும் நம்பினார்கள். சில படங்களை இயக்கிய பிறகு நடிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நினைக்கவில்லை.
தற்போது என்னையும், பிரதீப் ரங்கநாதனையும் ஒப்பிட்டு பேசுகின்றனர். இருவரும் ஒரே துறையில் பயணிப்பதை ஒப்பிடலாம். அவரும், நானும் ஒரு படத்தை இயக்கிவிட்டு அடுத்த படத்தில் ஹீரோவாக மாறிவிட்டோம். அதனால், இதுபோன்ற கருத்து உலா வருகிறது. படம் பார்க்கும்போது இதுபோன்ற அர்த்தமற்ற விமர்சனங்கள் காணாமல் போய்விடும். இந்த படத்துக்கு `ப்ரியமுடன்’ என்று தலைப்பு சூட்டினோம். ஆனால், அந்த தலைப்பின் உரிமை தரப்படவில்லை. அதனால், ‘வித் லவ்’ என்று பெயரிட்டோம். `குட் நைட்’, `லவ்வர்’, `டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களுக்கும் ஆங்கில தலைப்புதான். இதற்காவது தமிழில் வைக்கலாம் எனறு முயற்சித்தேன். அது முடியவில்லை’ என்றார்.
