சென்னை: கடந்த 1990களின் பின்னணியில் தனுஷ் நடிக்கும் ‘கர’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் பிரமாண்டமாக தயாரிக்க, அவரது மகள் குஷ்மிதா கணேஷ் இணைந்து தயாரித்துள்ளார். ‘கரசாமி’ என்ற இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி, மர்மம் கலந்த பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக படம் உருவாகியுள்ளது. ‘போர் தொழில்’ என்ற வெற்றிப் படத்துக்கு பிறகு விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.
மேலும், அல்ஃபிரட் பிரகாஷூடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார். தனுஷ் ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் கே.எஸ்.ரவிகுமார், ஜெயராம், சூரஜ் வெஞ்சரமூடு, கருணாஸ், பிருத்விராஜன் நடித்துள்ளனர். 1990களின் காலக்கட்டத்தை மீட்டெடுக்க மிகப்பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டன. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்துள்ளார். வரும் கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.
