முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், 2004ல் ‘ஹோ கயா நா’ என்ற இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமானார். 2007ல் ‘லட்சுமி கல்யாணம்’ படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார். 2008ல் ‘பழனி’ என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். கடந்த 22 வருடங்களாக தொடர்ந்து நடித்து வரும் அவர், சில பயிற்சிகளின் மூலம் தனது இளமையையும், அழகையும் குறையாமல் பாதுகாத்து வருகிறார். இதுகுறித்து பேசிய அவர், ‘தற்போது எனக்கு 40 வயதாகிறது. பரபரப்பான படப்பிடிப்புகளுக்கு இடையே என்னிடம் உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை செய்ய அறிவுறுத்தினார்கள். படங்களில் பரபரப்பாக இருந்தாலும், யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்ய நான் ஒருபோதும் தவறியது இல்லை.
ஒவ்வொரு நாளும் உடலுக்கு தேவையான உடற்பயிற்சிகளை செய்து வருகிறேன். பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக சாப்பிடுகிறேன். தேங்காய் தண்ணீர் எனது அன்றாட உணவில் நிச்சயமாக இருக்கும். பழங்களிலுள்ள இயற்கையான இனிப்புகள், பச்சை காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள், தாவர விதைகளிலுள்ள அத்தியாவசிய கொழுப்புகள் ஆகியவற்றில் இருந்து நமக்கு தேவையான பேராற்றல் கிடைக்கிறது. வயதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால், உடற்பயிற்சியை தொடர்ந்து தவறாமல் செய்து வருகிறேன். இதுதான் எனது இளமை மற்றும் அழகின் ரகசியம்’ என்றார்.
